• Sun. Oct 12th, 2025

160 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி விளக்கமறியலில்

Byadmin

Dec 28, 2024

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.

பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.

பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *