• Sat. Oct 11th, 2025

“விந்து வங்கி, ஆபத்தான விடயம்”

Byadmin

Apr 3, 2025

விந்து வங்கி அமைக்கப்படுவது சிறந்த யோசனை அல்ல என, அல் ஆலிமா வைத்தியர் மரீனா தாஹா ரிபாய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விந்து வங்கி அமைக்கப்படுவது குறித்து அண்மையில் பல்வேறு பாராட்டுக்குரிய கட்டுரைகள் வெளிவந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்ன. மேலோட்டமாகப் பார்த்தால், கணவரின் மலட்டுத்தன்மையால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும் ஒரு அற்புதமான யோசனை எனவும், விந்து பெயர் குறிப்பிடப்படாத ஒரு நன்கொடையாளரிடமிருந்து வருகின்றமையும் என்பது ஒரு பெரிய நன்மையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் இது மிகவும் ஆபத்தான விடயமாகும். விந்துக் கலங்களை தானம் செய்யும் ஒருவர் தனது மனைவியுடனும் சேர்ந்து குழந்தைகளைப் பெறுவார். பின்னர் செயற்கை கருவூட்டல் மூலம் பிறக்கும் குழந்தைகள் அவரது சொந்தக் குழந்தைகளை மணக்க நேரிடலாம். அதாவது உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்பலாம். இது முரணான பாலியல் உறவாகும்.

இதில் சோகமான உண்மை என்னவென்றால், தானம் செய்பவர் யார் என, செயற்கையாக குழந்தையைப் பெறும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ தெரியாததால், அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள்.

இஸ்லாம் அத்தகைய நடைமுறையை முற்றிலுமாக தடை செய்கிறது. இஸ்லாத்தின் படி பெண்ணின் கணவரைத் தவிர வேறு எந்த நபரின் விந்தையும் செயற்கை கருவூட்டலுக்குப் பயன்படுத்த முடியாது.

இருப்பினும், ஏனைய மதங்கள் அவரது கணவர் அல்லாத ஒருவரால் கருவூட்டப்படுவதைத் தடை செய்யவில்லை என்றால், குறைந்தபட்சம் தானம் செய்பவரின் முழு விபரங்களையாவது விந்தை பெறும் தரப்பிற்கு கொடுக்கப்பட வேண்டும். இதனால் அந்த தாய் தனது குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதைத் தெரிவிக்க முடியும். இதனால் அவரது சந்ததியினர் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

சாதாரண மனிதர் ஒருவர் இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கிறார் என்பது தெரியவில்லை. ஆயினும் இதன் மூலம் நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியாது.

இந்த முக்கியமான உண்மையை மருத்துவ வல்லுநர்கள் கருத்தில் கொள்வார்களா?

என வைத்தியர் மரீனா தாஹா ரிபாய் கேள்வியுடன் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *