• Sat. Oct 11th, 2025

எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Byadmin

May 28, 2025

பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபைக்கு பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சமீபத்தில் சபாநாயகரைச் சந்தித்து, நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தங்கள் பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடலைக் கோரி நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார். 

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து இதன்போது கருத்து தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், சமீபத்திய மனித கொலைகள், பல குற்றக் கும்பல்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், உள்ளூர் அரசியல்வாதிகள் அந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். 

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த சந்திப்பின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வசதிகள் இல்லையென்றால், தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறு கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயர் ஜனநாயக பண்புகள் கொண்ட நாட்டில், பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்கக்கூடாது என்று கூறினார். 

ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். 

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தனது கருத்தைத் தெரிவிக்கும் போது, பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கும் வரை அவர்களின் முழு பாதுகாப்பையும் அகற்றாமல் பாதுகாப்பு தேவை என்று கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானது என்றும், மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்ற பிறகு அதன் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *