• Sun. Oct 12th, 2025

குஜராத் விமான விபத்து – 241 பேர் உயிரிழப்பு

Byadmin

Jun 13, 2025

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விமான பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர்பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விபத்தில் அவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விடுதியின் 4 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியதில், அந்த கட்டிடம் உடைந்து நொறுங்கியது. இதில்,இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *