• Sun. Oct 12th, 2025

இஸ்ரேல் – ஈரான் போர்: அமெரிக்கா அதிரடி

Byadmin

Jun 21, 2025

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட், “எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா? வேண்டாமா? என்ற விஷயத்தில் கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிரச்சினைக்குள் செல்லலாமா? வேண்டாமா? என்பதை நான் முடிவெடுப்பேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப் ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை. எந்தவோர் ஒப்பந்தமும் தெஹ்ரான் யுரேனியத்தை செறிவூட்டுவதை தடைசெய்து, ஈரானின் அணு ஆயுதத்தை அடையும் திறனை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ட்ரம்ப் எப்போதும் ஒரு ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார், அவர் ஒரு அமைதியை உருவாக்குபவர். அவர் வலிமையின் மூலம் அமைதியை உருவாக்குபவர். எனவே, ராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால், ட்ரம்ப் எப்போதும் அதைப் பெறுவார். அதே நேரத்தில் பலத்தைப் பயன்படுத்தவும் அவர் பயப்படவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை நிறுத்த ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.” என்றார்

ஈரான் – இஸ்ரேல் இடையே ஒரு வார காலமாக நடந்து வரும் வான்வழிப் போர் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரிடமும் போரை நிறுத்துவதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.

இதனிடையே, ஈரான் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பல இடங்களில் உள்ள தனது போர்க் கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா நகர்த்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *