• Sat. Oct 11th, 2025

’ஈரான் உடனான போரில் அமெரிக்கா சாதிக்கவில்லை’

Byadmin

Jun 27, 2025

இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக, இந்த போர் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

போலியான சியோனிச (இஸ்ரேல்) ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், சியோனிச ஆட்சி இஸ்லாமியக் குடியரசின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டது.

அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள். அமெரிக்கா நேரடியாகப் போரில் நுழைந்தது. ஏனெனில் அது அவ்வாறு செய்யவில்லை என்றால், சியோனிச (இஸ்ரேல்) ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அந்நாடு உணர்ந்தது. அந்த ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில், அமெரிக்கா போரில் நுழைந்தது. எனினும், எதையும் அமெரிக்கா சாதிக்கவில்லை.

அமெரிக்காவின் முகத்தில் இஸ்லாமிய குடியரசு ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உதெய்த் விமானத் தளத்தைத் தாக்கி ஈரான் சேதப்படுத்தியது. பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க மையங்களை ஈரானால் அணுக முடியும் என்பதும், அது அவசியம் என்று கருதும் போதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இதுபோன்ற நடவடிக்கை எதிர்காலத்தில் மீண்டும் நிகழலாம். ஏதேனும் தாக்குதல் நடந்தால், எதிரி நிச்சயமாக அதிக விலை கொடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *