• Sat. Oct 11th, 2025

இலங்கைக்கு கடத்தவிருந்த பல கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு

Byadmin

Jul 27, 2025

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். 

மேலும் இக்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 5 கடத்தல்காரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், கீழக்காசாக்குடி லெட்சுமி நகரில் கடந்த 16ஆம் திகதி வீடொன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

குறிப்பிட்ட இடத்தில் கஞ்சா குடோனாக இயங்கிய வீட்டை முதுநிலை கண்கணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா நேரடி பார்வையில் பொலிஸார் சோதனை செய்து 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இலங்கைக்கு படகுமூலம் கடத்த வசதியாக மூட்டைகளுடன் பதுங்கியிருந்த இருவரையும், கைது செய்தனர். 

இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் காரைக்காலுக்கு, இலங்கைக்கும் இடையே மிகப்பெரிய கஞ்சா மாபியாக்கள் நடமாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது. 

மேற்படி குற்றவாளிகளுக்கு மூட்டை மூட்டையாக லொறிகள், கார்களில் கஞ்சா தொகையை அனுப்பி வந்த முக்கிய குற்றவாளியை பொலிஸார் கைது செய்தனர். 

இலங்கையிலிருந்து மீனவர்கள் அவ்வப்போது இரவோடிரவாக சிறிய படகுகளில் காரைக்கால் வந்துள்ளனர். 

காரைக்காலிலிருந்து படகில் கஞ்சாவை ஏற்றி இலங்கைக்கு அவர்கள் கடத்தியும் வந்துள்ளனர். 

இவர்களை பிடிப்பதற்காக பொலிஸார், கஞ்சா வியாபாரிகளை போல பேசி இலங்கையிலிருந்து படகில் வரவழைத்தனர். 

கீழகாசாக்குடி எமரால்டு பீச்சுக்கு 10 கடல் மைல் தொலைவில் இந்த மீனவர்களை முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா தலைமையிலான கடலோர காவல் படையினர் கைது செய்து, படகுடன் கரைக்கு கொண்டு வந்தனர். 

இது தொடர்பாக கஞ்சா கொள்முதலுக்கு காரைக்காலை நோக்கி இரவு நேரத்தில் படகில் வந்த இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த யகையா முகமது(40), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வகுமார்( 40) இருவரையும் பொலிஸார் நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

அவர்கள் வந்த படகையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். 

இலங்கையில் இருந்து இந்திய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் படையினருக்கு சந்தேகம் எழாதபடி, சிறு படகுகளில் வந்து கஞ்சா கடத்தலை செய்து வந்துள்ளனர். 

நடுக்கடலில் சிக்கல் நேருமானால் கஞ்சா மூட்டைகளை கடலில் வீசிவிட்டு படகில் பறந்து மறைந்தும் வந்துள்ளனர். 

காரைக்காலில் கஞ்சாவை புழங்க விடுவதில் இதுவரை சிறு, குறு வியாபாரிகளே சிக்கி வந்துள்ளனர். ஆனால் ஒரே நேரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கஞ்சா பிடிபட்டது இதுவே முதல்முறை. 

கடந்த வாரம் கஞ்சா குடோனை வளைத்து, கஞ்சா வியாபாரிகளை கைது செய்து, முக்கிய வியாபாரி வேலூர் கிஷோரையும், இலங்கை கஞ்சா கடத்தல்காரர்களையும் கைது செய்த பெண் ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி சவுஜன்யாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *