• Mon. Oct 13th, 2025

அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத் தொகை

Byadmin

Aug 6, 2025

வணிக அல்லது சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத் தொகை சமர்ப்பிக்க வேண்டிய முன்னோடித் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) செயல்படுத்தவுள்ளதாக, ஃபெடரல் ரெஜிஸ்டர் இணையதளத்தில் நேற்று (04) வெளியிடப்பட்ட முன்னோட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.

12 மாத கால “விசா பிணை முன்னோடித் திட்டத்தின்” கீழ், தூதரக அதிகாரிகள் குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களிடம் 5,000, 10,000 அல்லது 15,000 அமெரிக்க டொலர்கள் பிணைத் தொகையை கட்டாயப்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஓகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசா மீறல் விகிதங்கள் அதிகமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அல்லது புலம்பெயர்ந்தோர் பரிசோதனை மற்றும் அடையாள சரிபார்ப்பு தகவல்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பிணைத் தொகை கட்டாயப்படுத்தப்படலாம்.

பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னர் ஒன்லைனில் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு, டிரம்ப் நிர்வாகம் விசா விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கடந்த வாரம், விசா புதுப்பித்தல் விண்ணப்பதாரர்கள் மீண்டும் நேரடி நேர்காணலுக்கு உட்பட வேண்டும் என்று இராஜாங்கத் திணைக்களம் அறிவித்தது. இது முன்பு தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *