நிபுரு என்ற எக்ஸ் கோள் காரணமாக பூமியில் நவம்பர் 19ம் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என்ற செய்தி இன்டர்நெட் வதந்தி என நாசா கூறியுள்ளது. பிளானெட் எக்ஸ்நியூஸ்.காம் என்ற வெப்சைட்டில் நிபுரு என்ற பிளாசென்ட் எக்ஸ் கோள் பற்றி தகவல் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. இது கருப்பு நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு வாயுக் கோள் என்றும், நட்சத்திரமாக மாற முயற்சித்து தோல்வியடைந்ததால், அது வாயு கோளாக மாறியது என கூறப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் கடைசியாக இருக்கும் இந்த கோள் சூரியனை சுற்றி வர 3,600 ஆண்டுகள் ஆகும் என்றும், இது கடந்த செப்டம்பர் 23ம் தேதி அன்று பூமி மீது மோதி பேரழிவை ஏற்படுத்தும் என்ற செய்தியை அந்த இணையதளம் வெளியிட்டது. இதை அப்போது நாசா மறுத்தது.
தற்போது இந்த நிபுரு கோளின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் பூகம்பம் ஏற்படுவதும், எரிமலைகள் வெடிப்பதும் அதிகரிக்கும். இறுதியாக வரும் நவம்பர் 19ம் தேதி ‘அர்மஜெட்டான்’ என்ற மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என செய்தி பரப்பப்படுகிறது.
இதன் காரணமாக பிரான்ஸ், இத்தாலியிலிருந்து அலாஸ்கா மற்றும் ரஷ்யா வரையும், அமெரிக்க ேமற்கு கரையோர பகுதியிலும், இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற பகுதிகளிலும் கோடிக்கணக்கான அளவில் உயிரிழப்பு ஏற்படும் என டெரல் கிராப்ட் என்ற எழுத்தாளர் பீதியை கிளப்பிவிட்டுள்ளார். இந்த செய்தியை அடிப்படையாக வைத்து யூ டியூப்பில் பல கிராபிக்ஸ் வீடியோ செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அமெரிக்காவின் நாசா மையம் முற்றிலும் மறுத்துள்ளது.
நிபுரு என்ற கோளே இல்லை. நிபுரு கோள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் இன்டர்நெட் வதந்திகள். நவம்பர் 19ம் தேதி மிகப் பெரியளவில் பூகம்பம் ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
நிபுரு என்ற கோள் உண்மையாக இருந்திருந்தால், அதை விண்வெளி விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருப்பர். அர்மஜெட்டான் பூகம்பம் நடக்கப்போவதே இல்லை எனவும் நாசா கூறியுள்ளது.
-திட்டவட்டமாக மறுக்கிறது நாசா