அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புதிய நிறைவேற்று குழுவை தெரிவு செய்தவற்கான கூட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை (30) வெள்ளவத்தை ஜும்ஆப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய குழு உறுப்பினர்கள் 106 பேர் கலந்துகொண்டு அடுத்துவரும் மூன்று வருடத்திற்கான புதிய நிறைவேற்றுக்குழுவை தெரிவு செய்யவுள்ளனர்.
இதன்போது, உலமா சபையின் 11 பதவி தாங்குனர்களையும் மத்திய சபை உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளது.
மத்திய குழுவில் அங்கத்துவம் வகிக்கும் அனைவரும் வாக்களிப்பதற்கும் வாக்கு பெறுவதற்கும் தகுதியுள்ளவர்களாக கருதப்படுவர். இந்த 106 பேருக்கு மத்தியில் நடத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பில் 30 பேர் நிறைவேற்றுகுழு உறுப்பினர்களாக முதல் சுற்றில் தெரிவு செய்யப்படுவர்.
இதனையடுத்து, தெரிவான முப்பது பேர்களில் 11 பேர் பதவிகளுக்காக தனித்தனியாக பதவி நிலைகளுக்கு தெரிவு செய்ய மத்திய சபையின் 106 பேரின் இரகசிய வாக்குகள் மூலம் மீண்டும் தெரிவுகள் இடம்பெறும்.
அத்துடன் விசேட கண்காணிப்பாளர்களாக ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்தியகுழுவில் அங்கம் வகிக்காத சிரேஷ்ட உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். – Vidivelli