• Sun. Oct 12th, 2025

அமில தஸநாயக்க MBBS முன்மாதிரி மருத்துவப் பட்டதாரி

Byadmin

Aug 29, 2025

அமில தஸநாயக்க எனும் பெயருடைய இந்த MBBS மருத்துவப் பட்டதாரி பற்றிய ஒரு குறிப்பை முகநூலில் வாசித்த போது -ஒரு தந்தையாக, முன்னாள் விரிவுரையாளராக ஒரு அதிபர் ஆசிரியையின் மகனாக- எனது மனம் குளிர்ந்தது, ஒரு முன்மாதிரி மாணவராக அவரை தமிழ் பேசும் மாணவர்களுக்கும் அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என மனம் சொன்னது.

குருநாகள் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் கொழும்பு ராயல் கல்லூரியில் இரசாயன விஞ்ஞானம் உயர்தரம் கற்று அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தில் தேறி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஏக காலத்தில் இலங்கையில் சுமார் 10,000 மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்புகளை நடத்தியுள்ளதோடு அவரது மாணவர்கள் சிறப்பாகத் தேறுவதற்கு தியரி, ரிவிஷன், ரெபிட் ரிவிஷன், பழைய வினாத்தாள் என பல உத்திகள் மூலம் ஏ, பீ சித்திகளை பெற உதவியுள்ளார்.

தான் பட்டமளிப்பு விழாவிற்கு தனது பெற்றாருடன் வருகை தந்த போது தனது சொந்த உழைப்பில் (சீதனமாக அல்ல) வாங்கிய BMW i7, Nissan GT-R Nismo இரு வாகனங்களில் வருகை தந்துள்ளார்.

அரசாங்கத்தினால் இலவசக் கல்வியை உயர்கல்வியை வளங்களைத் தர முடியும், பெற்றார், ஆசிரியர்களால் முறையான அடித்தளங்களை இட்டு வழிகாட்டத் தான் முடியும், ஆனால் இலக்கை நோக்கிய பயணத்தில் திடசங்கற்பமும், விடா முயற்சியும் கடின உழைப்பும் மாணவர்களுடை சுய ஆர்வம் மற்றும் தொடர் ஈடுபாடு சார்ந்தவையாகும்!

அவற்றிற்கும் மேலால் தனது துறையில் ஏனைய மாணவர்களுக்கும் வழிகாட்டும் ஆசிரியமும், தொடர் கற்றலும் கற்பித்தலும், பிரார்தனைகளும், ஆசிர்வாதங்களும் ஒரு பட்டதாரி மாணவரை எந்த அளவிற்கு கூர்மைப்படுத்தி வெற்றிக் கம்பத்தை நோக்கி பயணிக்கச் செய்கிறது என்பதற்கு வைத்தியர் அமில தஸாநாயக்க சிறந்த உதாரண புருஷராக திகழ்கிறார்!

மாணவப் பருவத்தில் சிறந்த ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகளோடு, பெற்றார்களை மதித்து அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடத்தல், ஆசிரியர்களை மதித்து கீழ்படிந்து நடத்தல், கற்கின்ற காலத்தில் தவறான நட்புகள், பழக்க வழக்கங்களில், காதல் போன்றவற்றில் காலத்தை விரயம் செய்வதை தவிர்த்தல், இன்டர்நெட் விளையாட்டுக்கள் சமூக ஊடகங்களில் சுயகட்டுக் கோப்பின்றி அடிமையாகி விடாமல் விழிப்பாக நடந்து கொள்ளல் போன்ற பண்புகள் தான் ஒரு மாணவரை சரியான திசையில் வழி நடாத்துகின்றன!

அன்பிற்குரிய வைத்தியர் திரு அமில தஸநாயக்க!

உங்கள் வெற்றியில் சாதனையில் இலங்கையர் நாம் பெருமிதமடைகிறோம்,

உங்களுக்கும் உங்களது அன்பின் பெற்றார்களுக்கும், உங்கள் ஆசான்களுக்கும், உங்கள் சாதனையில் பேரானந்தமடையும் நாடு தழுவிய உங்கள் மாணவர்களுக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துக்கள்!

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

29.08.2025 || SHARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *