மொழிபெயர்ப்பு சேவை ஊடாக பல்லின மக்கள் வாழும் எமது நாட்டிற்கு ஒரு சிறந்த பணி நடைபெறுகின்றது. இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுகின்றது என தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு “நம்பகமான எதிர்காலத்தை உருவாக்கும் மொழி மொழிபெயர்ப்பு” என்ற கருப்பொருளின் அரச மொழிகள் திணைக்களம் திங்கட்கிழமை (30) ஏற்பாடு செய்திருந்த விழாவில் உரையாற்றும் போது கூறினார். நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் ராஜகிரியவில் உள்ள திணைக்கள கேட்போர் கூடத்தில் நடந்த இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் முலப்பர் தொடர்ந்து உரையாற்றுகையில் மொழி பெயர்பாளர்களுக்கு மொழிகள் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் திறமை உள்ளது. தற்போதைய எமது அரசாங்கத்திற்கும் தேவைப்படுவது ஒவ்வொருவர் இடையிலும் புரிந்துனர்வை ஏற்படுத்துவதாகும். அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது ஒரு அரசாங்கமாக எமது பொறுப்பு என்பதைப் புரிந்துகொண்டு மொழிபெயர்ப்புத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதேபோல் மொழிபெயர்ப்பு சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்குவோம். உலகின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்ப்பின் மூலம் அனைத்து மொழிகளையும் பேசும் மக்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சீமெந்தைக் கொண்டு பாலங்களைக் கட்டும் திறன் இருப்பது போல் மொழிபெயர்ப்பாளருக்கும் மொழியின் மூலம் பாலம் எனும் உறவை கட்டும் திறன் உள்ளது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் இனவெறி அல்லது மதவெறி கொண்டவர் அல்ல எனக் கூறினார்.