• Sat. Oct 11th, 2025

புல்மோட்டையில் பஸ் டிப்போ அமைக்கப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி

Byadmin

Nov 1, 2017

புல்மோட்டையில் பஸ் டிப்போ அமைக்கப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி
…………………………………………………………………………………………………………………………………….

“திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை திருகோணமலை நகரிலிருந்து சுமார் 55 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஒரு பிரதேசமாகும். அரசுக்கு வருமானத்தைப் பெற்றுத் தரும் கனியமணல் கூட்டுத்தாபனம் இங்கு உள்ளது. எனினும் புல்மோட்டையில் ஒரு பஸ் டிப்போ இல்லாததால் இம்மக்களினதும் கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணி புரியும் ஊழியர்களினதும் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப் படுகின்றன.

இந்தக் குறைபாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு புல்மோட்டையில் பஸ் டிப்போ ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் பதவிசிறபுர – புல்மோட்டை போக்குவரத்தையும் இலகு படுத்த முடியும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறை தொடர்பான விவாதமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரவித்தாதாவது:
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை திருகோணமலை, கிண்ணியா, கந்தளாய், மூதூர் என நான்கு பஸ் டிப்போக்கள் உள்ளன. இந்த டிப்போக்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இவை நிவர்த்தி செய்யப்பட்டு இம்மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவை நிறைவு செய்து கொடுக்கப்பட வேண்டும்.
கிண்ணியா பஸ் நிலையம் நிர்மாணிக்கும் பணிகள் சுமார் 3 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் இதுவரை இதன் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதிப் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே இந்த தாமதத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தப் பஸ் நிலையத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும்.
பெரும்பாலான அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் புகையிரத சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் கொழும்பு – திருகோணமலை புகையிரத சேவையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதாவது இரவு நேர புகையிரதத்தில் இணைக்கப்படும் முதலாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
இதனால் முதலாம் வகுப்புக்கு புகையிரத ஆணைச்சீட்டுப் (Warrant) பெறும் அரச உத்தியோகத்தர்கள் பலர் இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது. திருகோணமலையில் விமானப்படை, கடற்படை, இராணுவ தளங்கள் இருப்பதால் அங்கு பணி புரியும் அதிகாரிகள் தான் இதனால் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.
எனவே. திருகோணமலை – கொழும்பு இரவு நேர புகையிரதத்தில் முதலாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அதே போல கொழும்பு – திருகோணமலை பகல் நேர புகையிரத பயணத்திற்கு மிக நீண்ட நேரம் எடுப்பதால் பொதுமக்கள் பலர் பகல் நேர புகையிரதத்தை தவிர்த்து வருகின்றனர். எனவே கொழும்பு – திருகோணமலை புகையிரத வீதியில் பகல் நேரத்தில் குறிப்பிட்ட தரிப்பிடம் மட்டும் கொண்ட கடுகதி புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அதிகமான மக்கள் பகல் நேர புகையிரதத்தில் பயணஞ்செய்ய ஆரம்பிப்பர். இதனால் வீதிப் போக்குவரத்து நெறிசலை குறைத்துக் கொள்ள முடியும்.
திருகோணமலையிலிருந்து வீதி அனுமதிப் பத்திரம் இல்லாத பஸ் போக்குவரத்து நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. எனினும் இந்த நல்லாட்சி காலத்திலும் இது கட்டுப்படுத்தப் படவில்லை. எனவே. வீதி அனுமதிப் பத்திரம் இல்லாத பஸ் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

-ஊடகப்பிரிவு, இஹ்ஸானா பரீத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *