• Sun. Oct 12th, 2025

கேட்டலோனியா தேர்தல்: களம் இறங்கும் ஸ்பெயின் பிரதமர்; தொடரும் மக்கள் போராட்டம்

Byadmin

Nov 13, 2017

கேட்டலோனியாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனது பாப்புலர் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேட்டலோனியா செல்ல உள்ளார்.

கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் மரியானோ ரஜாய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேட்டலன் தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7,50,000 கேட்டலோனியா மக்கள் பேரணியில் ஈடுபட்ட நிலையில், மரியானோ ரஜாய் இங்குச் செல்ல உள்ளார்.

அக்டோபர் மாதம் கேட்டலோனியா தனது சுதந்திரத்தை அறிவித்தது. இதனால், கேட்டலன் தலைவர்களை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் ஸ்பெயின் பிரதமர் ரஜாய்.

கேட்டலோனியா தனி நாடாகச் சுதந்திரம் பெறுவது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், 92% பேர் கேட்டலோனியா தனி நாடாகப் பிரிய வேண்டும் என வாக்களித்தனர்.

ஸ்பெயின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் இந்த வாக்கெடுப்பைச் சட்டவிரோதம் என்று கூறியிருந்தது.

கேட்டலோனியா பிராந்தியத்தின் கொந்தளிப்பு ஏற்பட்ட பிறகு, முதல் முறையாக ரஜாய் அங்கு செல்ல உள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு,கேட்டலோனியா நாடாளுமன்றத்தைக் கலைத்து தனது நேரடி ஆட்சியை அமல்படுத்திய ஸ்பெயின் மத்திய அரசு, டிசம்பர் 21-ம் தேதி இங்குத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது.

மத்திய அரசைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட கேட்டலன் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் சனிக்கிழமையன்று பார்சிலோனாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், செல்போன் டார்ச் லைட்களை அடித்தவாறு வீதிகளில் மக்கள் நடந்து சென்றனர்.

”நாங்கள் ஒரு குடியரசு” என்ற பதாகையினை சுமந்தவாறு மக்கள் பேரணியாக சென்றனர். மேலும், ‘அதிபர் பூஜ்டியமோன்’ என்றும் கோஷங்களை எழுப்பினர்.

கேட்டலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோனின் முக்கிய கூட்டணி கட்சியான இடதுசாரி இஆர்சி கட்சி, சிறையில் உள்ள தனது கட்சியின் தலைவர் ஒரியல் ஜுனகார்ஸ் மற்றும் தற்போது பெல்ஜியத்தில் உள்ள நீக்கப்பட்ட அமைச்சர்களும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளது.

கேட்டலோனியா செய்திதாளான லா வான்கார்டியாவில் வெளியான சமீபத்திய கருத்துக்கணிப்பில், டிசம்பர் மாதம் நடக்க உள்ள தேர்தலில் இஆர்சி கட்சி அதிகளவு வாக்குகளை பெரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *