நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுவது ‘பெரும்பாவம்’
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் புறக்கணிக்குமாறு தலைமை முஃப்தி ஷேக் அப்துல் அஜிஸ் அல்-அஷேக் (Grand Mufti Sheikh Abdul Aziz Al-Asheikh) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இது இஸ்லாம் மார்க்கத்திற்குப் புறம்பான ஒரு மூடப்பழக்கம் எனவும் மார்க்கத்தில் புதிதாக இணைக்கப்பட்ட செயல் எனவும் கூறினார்கள்.
“இது ஒரு பித்-அத் ( மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட பாவம்), இது போன்ற அனாச்சாரங்கள் நபித்தோழர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் வாழ்ந்த காலத்திற்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து, இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டது. முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துக்களையும், போதனைகளையும் பின்பற்றுவதை விடுத்து இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது” என்று முஃப்தி ஷேக் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரியாத்தில் உள்ள இமாம் துர்க்கி பின் அப்துல்லாஹ் மசூதியில் (Imam Turki Bin Abdullah Mosque, Riyadh) ஜும்ஆ சொற்பொழிவில் உரையாற்றிய போது கூறினார்.
மேலும் “யாராவது ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதை மற்றவர்களுக்கு ஊக்குவித்தால் அவர்கள் தீயவர்கள் மற்றும் வழிகேடர்கள்” என்றும் முஃப்தி ஷேக் கூறினார்.
“இறைத்தூதர் மீதான உண்மையான அன்பு அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரது சுன்னத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே வெளிப்படுத்தப்படும்” என்று கூறிய முஃப்தி ஷேக் அவர்கள், மேலும் இது பற்றி கூறுகையில்
திருமறைக் குர்ஆனின் 3:31 வசனத்தை மேற்கோள் காட்டி
“قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் (இறைத்தூதர் முகம்மதை) பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று கூறிவிட்டு “முழு பிரபஞ்சத்திற்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்டுள்ள முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் அடிமை என்றும், தூதர் என்றும் நம்ப வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை” என்றும் கூறினார்கள்.
“நபிகளாரை மதிப்பதும், நேசிப்பதும் அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமை. நபியவர்களின் போதனைகளைத் தவறாகப் புரிந்துகொள்பவர்கள், அவரை மறுக்கின்ற நாத்திகர்கள், தவறாக சித்தரிப்பவர்கள், பரிகாசம் செய்பவர்கள் ஆகியோரிடமிருந்தும் நபிகளாரின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். இதுவே நபி(ஸல்) அவர்களை உண்மையாக நேசிப்பதாகும்!” என்றும் முஃப்தி ஷேக் அவர்கள் கூறினார்கள்.
மேலும் அல்லாஹ் தனது திருமறையில் 9:24 வசனத்தில் கூறுகிறான்:
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நஷ்டத்திற்கு அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகின்ற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்” என்று கூறுவீராக! எனவே, நபிகளாருக்கு பிறந்த நாள் கொண்டாடுகின்ற வழிகேடான காரியங்களை விடுத்து அவர்களின் போதனைகளையும், சுன்னத்துக்களையும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழில்: முஸ்தபா ரஹ்மானி
நன்றி: ArabNews©
source -http://www.arabnews.com/islam-perspective/news/683771