“அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் அதிகமானவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்” – நாமல்——————————————————–
நல்லாட்சி அரசு என்ற நாமத்துடன் அரச வளங்களையும், சொத்துகளையும் வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கும் செயற்பாட்டையே அரசு முன்னெடுத்து வருவதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
துறைமுக மற்றும் கப்பற்போக்குவரத்து அலுவல்கள், தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான விவாதம் மீது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “கொழும்பு துறைமுகத்தின் சில பகுதிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது குறித்து கருத்துகள் வெளியாகியுள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஏற்படுத்திய நிலையை கொழும்பு துறைமுகத்திற்கும் ஏற்படுத்திவிட வேண்டாம்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தமையை இன்று நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை தனியார் மயப்படுத்தியதால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை உடன்படிக்கை நாட்டுக்குப் பாதகமானதென எதிர்த்தமையாலேயே அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் அமைச்சுப் பதவி மாற்றப்பட்டது. அத்துடன், விஜேதாஸ ராஜபக்ஷவின் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை காரணமாக அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் அதிகமானவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். அமைச்சர் மஹிந்த அமரவீர, இவர்கள் பேச்சுகள் நடத்திய போது தீர்வை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். ஆனால், ஒப்பந்தம் நடைமுறைக்குவர இன்னமும் சில வாரங்கள் மாத்திரமே உள்ள நிலையில், அரசு இவர்கள் விடயத்தில் அக்கரை கொள்ளவில்லை.“ என்றார்