• Sun. Oct 12th, 2025

வெனிசுலா நாட்டு தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுத்த கனடா: நீடிக்கும் மோதல்

Byadmin

Dec 26, 2017

(வெனிசுலா நாட்டு தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுத்த கனடா: நீடிக்கும் மோதல்)

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சில மாதங்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையை கலைத்து விட்டு புதிதாக அரசியல் சாசன சபையை அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமைத்தார். முழுக்க முழுக்க ஆளும் கட்சியே இந்த சபையில் பங்கு வகிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதனால், ஏற்பட்ட கலவரத்தில் 120-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அதிபர் மதுரோவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு சில தடைகளையும் விதித்தன.

கனடாவில் உள்ள வெனிசுலா தூதரக அதிகாரிகள் ஊழல் மற்றும் மனித உரிமைகளை மீறியதாக கூறி அந்நாட்டு அரசு அவர்களுக்கு சில தடைகளை விதித்தது.

கடந்த வாரம் திடீரென கனடா தூதர் க்ரைப் கோவாலிக் மற்றும் பிரேசில் தூதர் ரை பெரைரா ஆகிய இருவரும் நாட்டை விட்டு வெளியேறுமாறு வென்சுலா அரசியல் சாசன சபையின் தலைமை பொறுப்பில் இருக்கும் டெல்சி ரோட்சிக்ஸ் உத்தரவிட்டார்.

தூதரக அதிகாரிகளுக்கான சட்டதிட்டங்களை மேற்கண்ட இருவரும் ஒழுங்காக கடைபிடிக்க வில்லை எனவும், வெனிசுலாவின் உள் விவகாரங்களில் தலையிட்டார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்நிலையில், வெனிசுலாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு தூதர் வில்மர் பார்ரியெண்டோஸ் பெர்னாண்டஸ் மற்றும் தூதரக அதிகாரி ஏஞ்சல் ஹெர்ரேரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற கனடா உத்தரவிட்டுள்ளது.

வில்மர் பார்ரியெண்டோஸ் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், அவர் மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என்று கனடா வெளியுறவு துறை மந்திரி கிறிஸ்டியா ப்ரீலாண்ட் கூறியுள்ளார்.

வெனிசுலாவில் ஜனநாயக விரோத அரசு நடைபெற்றுவருவதாகவும், பிராந்திய நட்பு நாடுகளின் துணையுடன் அதை எதிர்ப்பதற்கான அழுத்தத்தை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்றும் ப்ரீலாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *