• Sat. Oct 11th, 2025

கத்தார் – அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம்

Byadmin

Jun 6, 2017

சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், அமீரகம், யெமன் ஆகிய 5 நாடுகளும் நேற்று காலை கத்தாருடன் கொண்டிருந்த தூதரக உறவை திடீரென துண்டித்துக் கொண்டன. 

கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்த நாடுகள் அறிவித்தன.

மேலும், தற்போது யெமன் நாட்டில் தனது தலைமையிலான கூட்டுப் படையில் இணைந்து செயல்பட்டு வரும் கத்தார் ராணுவம் கழற்றிவிடப்படும் என்றும் சவூதி அரேபியா கூறியது. இவை தவிர, இந்த ஐந்து நாடுகளும், கத்தாருடன் கொண்டுள்ள வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை துண்டிக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளன. 5 நாடுகள் வரிசையில் லிபியா, மாலைத்தீவு ஆகிய நாடுகளும் இணைந்தது. கத்தார் உடனான உறவை 7 நாடுகள் துண்டித்து உள்ளன. இது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தூதரக உறவை துண்டித்த அரபு நாடுகள் உடனான பிரச்சனையை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது என கத்தார் கூறி உள்ளது.

அல்-ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய கத்தார் வெளியுறவுத்துறை மந்திரி சேக் முகமது பின் அப்துல்ரகுமான் அல் தானி,  

கத்தார் மன்னர் தமிம் பின் ஹமாத் அல்தானியிடம் பேசிய குவைத் ஆட்சியாளர், இப்போது எழுந்து உள்ள நெருக்கடி தொடர்பாக செவ்வாய் இரவு வரையில் பேசுவை நிறுத்துங்கள் என கேட்டுக் கொண்டு உள்ளார். கத்தார் மன்னருக்கு அழைப்பு விடுத்த குவைத் மன்னர், பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் வேண்டும் என கூறினார் என்றார். மேலும் அப்துல் ரகுமான் அல்தானி பேசுகையில் உறவுகளை துண்டித்துக் கொண்ட நாடுகள் கத்தார் மீது அவர்களுடைய சொந்த கருத்தை திணிக்க முயற்சிக்கின்றன அல்லது கத்தாரின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றன என குறிப்பிட்டு உள்ளார். 

அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று ஆகும். இங்குதான் 2022–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்க இருக்கின்றன. அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளம் கத்தாரில் உள்ள அல் உத்தெய்த் நகரில் அமைந்து இருக்கிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் உள்ளனர்.

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *