(முகம்மது நசீத்தை விடுதலை செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!)
மாலத்தீவில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயக முறையில் முதல் முறையாக ஆட்சி அமைத்தவர் முகம்மது நஷீத்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முகம்மது நஷீத் அதிபராக இருந்த போது, தனக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பித்த அந்த நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து முகமது நஷீத்துக்கு எதிராக அங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது. 2012ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் கூட்டுப்புரட்சியின் போது அவரது பதவிபறிக்கப்பட்டது.
அத்துடன், பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேபோல், துணை அதிபர் அகமது அதீப் உள்பட மேலும் சில அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், முகம்மது நஷீத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்களையும் விடுவிப்பதாக அறிவித்துள்ள மாலத்தீவு உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையில் எந்த குறுக்கீடும் ஆதிக்கமும் இல்லாமல், சுதந்திரமான விசாரணை நடைபெறும் வரை முகம்மது நஷீத்தை விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.
நேற்று(வியாழக்கிழமை) இரவு வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாலத்தீவின் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமிற்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நீதித்துறை போலீஸ் மற்றும் அதிகாரிகள் என அனைத்து அமைப்புகளையும் கட்டுக்குள் வைத்து தற்போதைய அதிபர் கயூம் ஆட்சி நடத்தி வருகிறார்.