(வயிற்று புண் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? இத முதல்ல படிங்க..!)
தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன.
மது அருந்துதல், புகைபிடித்தல், சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை (அல்சர்)உண்டாக்குகிறது.
மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன.
இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும்.
இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சற்று அதிகம். எனவே, நேரத்துக்கு உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.
இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா, காரம், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை குறைத்து விடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம்.
இரைப்பைப் புண் குணமாக எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும்.
மன அமைதியும் ஓய்வும் மிக முக்கியம். இதற்குத் தியானம் செய்வது நல்லது, இரைப்பைக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களும் உள்ளன. தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை முறைப்படி செய்துவர, இரைப்பைப் புண் வருவதைத் தடுக்கலாம்.