• Tue. Oct 14th, 2025

பெண்களின் வயதிற்கு ஏற்ப குழந்தை பேறுக்கான காலம்

Byadmin

Mar 1, 2018

(பெண்களின் வயதிற்கு ஏற்ப குழந்தை பேறுக்கான காலம்)

திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தைப்பேறு. நமது நாட்டைப் பொறுத்தவரை 75 சதவீத தம்பதிகளே திருமணமான முதல் ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இரு ஆண்டிற்குள் 85 சதவீத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பொதுவாக பெண்கள் 21 வயதிலிருந்து 27 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது தாய்க்கு ஆரோக்கியம்.

இந்த வயதில் இருக்கும் பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியில் பாதிப்பு இருக்காது. இந்த வயதுக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஓராண்டு முன்னே பின்னே இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது. சமீபகாலமாக திருமணமான வேலை பார்க்கும் பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப் போடுகிறார்கள்.

20, 21 வயதில் திருமணமான பெண்கள் இப்படி குழந்தை பேறை தள்ளிப் போடலாம். ஆனால் 30, 35 வயதில் திருமணம் செய்து கொண்டு, நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது காலகாலமாய் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும். ஏனெனில் வயது கூடக் கூட சிறிய குறைபாடுகள் கூட பெரிய குறைபாடுகளாக மாறக்கூடும்.

பெண்களென்றால் சினை முட்டை உற்பத்தி குறைந்து விடும். ஆண்களென்றால் உயிரணுக்களின் உயிரோட்ட வேகம் குறைந்து விடும். 30 வயதில் கல்யாணம் செய்து கொண்டவர்கள் இயற்கையாகவே குழந்தைப்பேறு நமக்கு இருக்கும் என்று மூன்று, நான்கு வருடங்கள் காத்திருக்கக் கூடாது. காலம் தாழ்த்திய அல்லது பருவம் கடந்த திருமணம் என்றால் ஆண், பெண் இருவருமே உரிய மருத்துவ சோதனை செய்து கொள்வது பின்னால் சில பிரச்சினைகள் வராது தடுக்க உதவும்.

திருமணத்திற்கு முன் தெரிந்தோ, தெரியாமலோ முறையற்ற உறவுகளில் ஈடுபட்டிருந்தால் பால்வினை நோய்கள் தாக்கம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் உயிரணு எண்ணிக்கையை சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள் ஏதேனும் குறைகள் இருப்பதை நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே, இல்லறத்தில் ஈடுபட வேண்டும் அப்போது தான் இனிய மணவாழ்க்கை அமையும்.

மனைவி வேலைக்கு போக வேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களின் எதிர்பார்ப்பு. வேலை பார்க்கும் பெண்களுக்கும், வேலை பார்க்காத பெண்களுக்கும சினை முட்டை கருத்தரிப்பதில் கூட வேறுபாடு இருப்பதை காண முடிகிறது. மனது, உடல், கருமுட்டை இம்மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெண்களில் வேலை பார்க்காத பெண்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பதில் வெற்றி கிடைப்பது அதிகம். காரணம் எந்த டென்ஷனும் இல்லாமல், மனசு லேசாகி, உடலும் லேசாகி உறவில் ஈடுபடும் போது கருமுட்டை சினைப்பது எளிதாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *