• Sun. Oct 12th, 2025

தெல்தெனிய மொறகஹமுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹரீஸ்

Byadmin

Mar 6, 2018

(தெல்தெனிய மொறகஹமுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹரீஸ்)

தெல்தெனிய மொறகஹமுள்ள பிரதேசத்தில் இரு தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் நடைபெற்ற சம்பவத்தை முஸ்லிம் இனத்திற்கெதிரான வன்முறையாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்பிரதேசத்தில் தகுந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய மொறகஹமுள்ள பிரதேசத்தில் நேற்று (04) இரவு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில் வீதிப் போக்குவரத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்குதலுக்குள்ளான பெரும்பான்மை சகோதரர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அதனை பேரினவாத சக்திகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையினை அப்பிரதேசத்தில் தோற்றுவித்துள்ளதாகவும் அறிகின்றேன். இவ்வாறு தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஒரு சமூகத்திற்கெதிரான வன்முறையாக மாறுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஆரோக்கியமான விடயமன்று.
சிறு சிறு பிரச்சினைகளை காரணமாகக் கொண்டு குறித்த ஒரு இனத்திற்கெதிரான வன்முறையை தோற்றுவிப்பவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதுபோனால் எடுத்ததெற்கெல்லாம் இனவாத தாக்குதல் நாட்டில் ஏற்பட்டு இந்நாடு போராட்ட களமாக மாறி இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் அபாய நிலை ஏற்படும். அதற்காக தனிப்பட்ட குற்றச் செயல்களை செய்யும் எவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறவில்லை அவ்வாறானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும்.
பிரதமர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை பொறுப்பெடுத்ததும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறுகின்ற இரண்டாவது இனவாத தாக்குதல் சம்பவமாக இது காணப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சி அரசில் நீடிப்பது அரசுக்கு ஆரோக்கியமான விடயமல்ல. ஒரு பிரச்சினைக்கு தீர்வு ஏற்டப்படுவதற்கு முன்னதாகவே அடுத்த பிரச்சினை உருவெடுக்கிறது.
 இது தொடர்கதையானால் நாட்டின் அமைதி பாதிக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறுவு விரிசலடைந்து சர்வதேச சமூகம் இந்நாட்டை மீண்டும் வேற்றுக் கண்கொண்டு நோக்கும் நிலை ஏற்படும். எனவே இப்பிரச்சினை பூதாகரமாகி விஷ்வரூபம் எடுப்பதற்கு முன்னராக காத்திரமான தகுந்த நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
-அகமட் எஸ். முகைடீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *