• Sun. Oct 12th, 2025

கொழும்பில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு! அலரி மாளிகை முற்றுகை!

Byadmin

Mar 6, 2018

(கொழும்பில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு! அலரி மாளிகை முற்றுகை!)

முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் கொதித்தெழுந்து அலரி மாளிகை வாயிலை முற்றுகையிட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் வெடித்த இனக்கலவரம் காரணமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள், சொத்துக்கள் என்பவற்றுடன் பள்ளிவாசல்களும் பேரினவாதிகளால் கடுமையாக ​சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரினவாதிகளின் அட்டகாசங்களுக்கு எதிராக கொழும்பில் கொந்தளித்து எழுந்த முஸ்லிம் இளைஞர்கள் இரவு 7 மணிதொடக்கம் நள்ளிரவு தாண்டிய நிலையிலும் அலரி மாளிகையின் பின்வாசல் பிரதேசத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பிரஜைகள் சமாதான சபையின் இணைச் செயலாளர் அன்வர் மனதுங்க, ஒருங்கிணைப்பாளர் ஆர்.எப். அஷ்ரப் அலீ, உபதலைவர் பவாஸ் மற்றும் சமூக சேவகரும் அரசியல்வாதியுமான ஷிராஸ் யூனூஸ் உள்ளிட்ட குழுவினர் வழிப்படுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் போய் வரும் வழி பல மணித்தியாலங்களாக மூடப்பட்டு முற்றுகையிடப்பட்ட நிலையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நாளை காலை ஒன்பதரை மணியளவில் போராட்டக்காரர்களை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரம் ஒதுக்கித் தருவதாகவும், அமைதியாக கலைந்து செல்லுமாறும் பாதுகாப்புத் தரப்பினர் பிரஜைகள் சமாதான சபையின் முக்கியஸ்தர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து நாளைய தினம் பிரஜைகள் சமாதான சபையின் முக்கியஸ்தர்களுடன் கண்டி பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த இக்ரம் (தெல்தெனிய) மற்றும் மிப்லால் மௌலவி ஆகியோர் உள்ளிட்ட குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *