• Mon. Oct 13th, 2025

மூட்டு வலிக்கான எளிய தீர்வு!

Byadmin

Apr 11, 2018

(மூட்டு வலிக்கான எளிய தீர்வு!)

இன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி வந்துவிடுகிறது.

முன்பெல்லாம் மூட்டு தேய்மானத்தால் தான் மூட்டு வலி வருகிறது என்றார்கள். ஆனால் இன்றைய சூழலில் அதிகப்படியாக உழைக்கும் அனைவருக்கும் மற்றும் உழைப்பேயில்லாதவர்களுக்கும் எந்த வயதிலும் மூட்டு வலி வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் தங்களின் மெனோபாஸ் கட்டத்தை கடந்தவுடன் மூட்டு வலியை எதிர்கொள்கிறார்கள். அத்துடன் அவர்கள் சாப்பிடும் உணவு முறையும் மூட்டு வலியை ஏற்படுத்துகிறது. உணவில் போதுமான அளவிற்கு கல்சிய சத்துகளை சேர்த்துக் கொள்ளாததாலும், மூட்டுகளுக்கு போதிய அளவிற்கு இயக்கம் அளிக்காததாலும் இவர்கள் மூட்டு வலியை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

ஆண்கள் அலுவலகத்தில் ஒரேயிடத்தில் அமர்ந்து மூட்டுகளுக்கு வேலையே கொடுக்காமல்  அதற்கு தேவையான சத்து மிக்க ஆகாரத்தையும் சாப்பிடாமல் 40 வயதிற்குள்ளாகவே மூட்டு வலியை வரவழைத்துக் கொள்கிறார்கள். அதே போல் மாடிப்படியை பயன்படுத்தாமல் இருப்பதும், நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளாமலிருப்பதும் இவர்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவதற்கு காரணங்கள்.

அதே போல் காசநோய், சொரியாஸிஸ், சர்க்கரை நோய்,  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு மூட்டு வலி எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். ஒரு சிலருக்கு அரிதாக காலில் ஏதேனும் அடிப்பட்டு அதனை சரிவர கவனிக்காமல் இருந்துவிட்டால் அப்பகுதியில் இருக்கும் மூட்டு பாதிக்கப்படக்கூடும்.

சீரான மிதமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான சத்தான உணவு இவற்றுடன் எலும்புகளுக்கு தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதன் மூலம் மூட்டுகளின் இயக்கம் சீராக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் மூட்டுக்கு இயக்கம் கொடுக்கிறேன் என்று வலு அதிகமிக்க விடயங்களை செய்யக்கூடாது.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் கால் வலிக்கிறது என்று உணர்ந்தால் கால்சியம் சத்துமிக்க கீரை, பால், முட்டை போன்றவற்றை சாப்பிடத் தொடங்குங்கள். பத்து வயதிற்குட்பட்டவர்கள் கால் வலிக்கிறது என்றால் அவர்களுக்கு ஓய்வே போதுமானது. அதன் பிறகு தினமும் காலை 10 மணி முதல் 3 மணி வேரை ஏதேனும் 20 நிமிடங்கள் வெயில் உங்கள் மீது படும்படி உலாவ வேண்டும்.

மிக அதிகமான பணிக்கும், மிக குறைந்த வேலைக்கும் விடை கொடுங்கள். சத்தான உணவிற்கும், சீரான உடற்பயிற்சிக்கு வரவேற்பு கொடுங்கள் மூட்டு வலியில்லாமல் வாழுங்கள்.இதையும் கடந்து மூட்டு வலி தொடர்ந்தால் உரிய மருத்துவ நிபுணரை அணுகி சத்திர சிகிச்சை செய்து அதன் பின்னர் பராமரிப்பில் கவனித்து நலமுடன் வாழுங்கள்.

வைத்தியர் ஆறுமுகம்

தொகுப்பு அனுஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *