(30 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழனுமா..? கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!)
அக்காலத்தில் 50 வயதிற்கு மேல் தான் பல ஆரோக்கிய பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இக்கால தலைமுறையினர் 40 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தாலே அது அதிசயமாக உள்ளது.
ஏனெனில் 30 வயதிலேயே பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான் முக்கிய காரணம்.
இவற்றால் இதய நோய், நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை போன்ற பலவற்றை இளமையிலேயே பலர் சந்தித்து சமாளித்து வருகிறார்கள். உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா?
உடலில் பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள். இவற்றால் 30 வயதிற்கு மேல் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கான்கள் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்திற்கு செல்லும் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தங்கி இரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்துவதைத் தடுத்து, இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும். மேலும் இது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
செர்ரிப் பழங்கள்
செர்ரிப் பழங்களில் ஆந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது. இவை கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் காலை வேளையில் 200 கிராம் செர்ரிப் பழங்களை எடுத்து வந்தவர்களுக்கு, உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளின் அளவு 60 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே வாரத்திற்கு 3-4 முறை ஒரு டஜன் செர்ரிப் பழங்களை உட்கொண்டு வருவது நல்லது.
பாதாம்
ஆய்வு ஒன்றில் 20 பேர் தினமும் 60 கிராம் பாதாமை 4 வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்ததால், 9 சதவீதம் இரத்த சர்க்கரை அளவு குறைந்ததோடு, இதய நோய் மற்றும் நீரிழிவின் தாக்கத்தை குறைப்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு ஆய்வில் 22 பேர் பாதாமை உட்கொண்டு வந்ததில், 6 சதவீதம் கெட்ட கொலஸ்ட்ராடல் அளவு குறைந்ததோடு, 6 சதவீதம் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே பாதாமை உப்பு சேர்க்காமல், சாப்பிடுவது நல்லது.