(நாசாவுடன் இணைந்து உபர் அதிரடி..!)
பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபர், நாசாவுடன் இணைந்து பறக்கும் கார் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
தனியார் கார் வாகனப் போக்குவரத்து நிறுவனமான உபர், தற்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து பறக்கும் கார் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நாசாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அர்பன் ஏர் மொபைலிட்டி (Urban Air Mobility) முறையில் பறக்கும் காரை வடிவமைத்து, அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் நாசா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
இந்த கார் மின்சாரத்தினால் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியின் மூலம் இயங்கக் கூடியது. இதனால் காற்று மாசுபடுவது கட்டுப்படுத்தப்படும்.
இதுகுறித்து நாசா நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜெய்வான் ஷின் கூறியதாவது:
பறக்கும் காரை வடிவமைப்பதில் உபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சமூதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றமாக இருக்கும்.
எப்படி மொபைல் போன்கள் வந்த பிறகு நம்முடைய ஒருநாளின் செயல்பாடுகள் அடிப்படையில் இருந்தே மாற்றமடைந்ததோ?, அதே போல உபர் வந்த பிறகும் மாற்றம் உருவாகும்.
தற்போது இதில் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பின்னாளில் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.
உபர் நிறுவனத்தின் பறக்கும் கார் சோதனை ஓட்டம் 2020ஆம் ஆண்டிலும் வணிக ரீதியான தொடக்கம் 2023 ஆண்டிலும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.