எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து நடாத்துகின்ற இப்தார் நிகழ்வுகளை முஸ்லிம் பொது மக்களும் அரசியல் வாதிகளும் கலந்து கொள்ளாமல் தவிர்க்க வேண்டுமென சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணியின் தலைவர் I.N.M.MIFLAL அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
தற்போதைய இலங்கை அரசானது முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை மிகவும் பொடு போக்காகவே கையாண்டு வருகிறது. இதன் பிற்பாடும் அதனை முஸ்லிம்களாகிய நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடாத்துகின்ற இப்தார் நிகழ்வுகளில் முக்கியமான உலக நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் வலுவடையும். எம்மை காட்டி இலங்கை அரசு தனது விடயங்களை சாதிக்க முயற்சிக்கின்ற போதும் எமது நிலையோ இலங்கை நாட்டில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற கதையாகவே அமைந்துள்ளது.
குறித்த நிகழ்வை முஸ்லிம்கள் அனைவரும் புறக்கணிக்கின்ற போது சர்வதேசத்துக்கு முஸ்லிம்களிடமிருந்து பலமான செய்தியொன்று சென்றடையும்.இது இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு ஒரு பெரிய திருப்பு முனையான விடயமாகவும் அமையலாம்.
தற்போது இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரியை முஸ்லிம் அரசியல் வாதிகள் சில மாதங்களாக சந்திக்க முயற்சிக்கின்ற போதும் அவர் அவர்களுக்கு நேரம் இன்னும் ஒதுக்கவில்லை.அவர் நேரம் ஒதுக்காமைக்கு அவரிடம் நேரமில்லாமை ஒரு காரணமாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் இவ்விடயத்தை பேச விரும்பவில்லை என்பதே இதன் பொருளாகும்.இப்படியான ஒருவரது இப்தாருக்கு செல்வதை விட ஒரு ஏழையின் குடிசையில் வெறும் தண்ணீரோடு இப்தார் செய்வது எவ்வளவோ மேலாகும். மேலும் இப்படியானவர்களின் இப்தாருக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் சென்றால் அவர்களையும் புறக்கணிக்க நாம் தயாராக வேண்டும்.
எமது பிரச்சனைகளை சர்வதேசமயப்படுத்த எமது அழகான ஒரு சந்தர்ப்பத்தை அவர்களாகவே ஏற்படுத்தி தந்துள்ளார்கள். இதனை நாம் பயன்படுத்துவதே சாதூரியமானதாகும். இன்றைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மற்றும் நடாத்துகின்ற இப்தார் நிகழ்வுகளை புறக்கணிப்பது முஸ்லிம் சமூகத்துக்கு சிறப்பானதாகும் என சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணி.