(முஸ்லிம்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கின்றன – கல்கந்தே தம்மானந்த தேரர்)
~கல்கந்தே தம்மானந்த தேரர் Galkande Dhammananda
தமிழில்: லறீனா அப்துல் ஹக்
ஒரு சமூகத்தில் ஏதேனுமொரு கும்பல் சட்ட ஒழுங்கைக் குலைத்து, சட்டத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு சொத்துக்களைச் சேதமாக்கி அழிக்கவும் மனிதர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் தொல்லை கொடுக்கவும் முனையக்கூடும். அதன் போது நீதியை நிலைநிறுத்தும் அமைப்பு முன்வந்து சட்டத்தைச் சரியாக நிலைநாட்ட முன்வருமாக இருந்தால், மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதற்கு அது ஒரு காரணமாக அமைந்துவிட மாட்டாது. மக்கள் சொல்வார்கள், ”ஆம், ஒரு கும்பல் எம்மைத் தாக்கியது. ஆனால், சட்டம் எங்கள் முன் இருக்கிறது. சட்டத்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.” என்று. அதேபோல, ஓர் அரசாங்கம் முன்வந்து, ”மன்னியுங்கள், எங்களால் ஒரு தவறு நடந்துவிட்டது” என்று சொல்லுமாக இருந்தால், அந்த வார்த்தைகள் மிகப் பலம் வாய்ந்தவை.
83 கறுப்பு ஜூலையில் செய்த பேரழிவுக்குப் பின்னர், ”மன்னியுங்கள்” என்று சொல்வதற்கு 11 வருட காலமெடுத்தது. நான் நினைக்கிறேன், சட்டத்தால் செய்யப்பட வேண்டிய விடயங்களைச் செய்யும் வகையில், சட்டத்தின் ஆளுகை சரிவர நிலவாத ஒரு நாட்டில், சமாதானம் பற்றிய கதையாடல் என்பது போலியான வெற்றுச் சொல் வெளிப்பாடு மட்டுமே!
மேலே நாம் சொன்ன முன்னணி அமைப்புகள் எவ்விதப் பாரபட்சமும் இன்றித் தம் கடமையைச் சரிவரச் செய்யுமானால், உண்மையிலேயே எங்களுக்குச் செய்வதற்கு அதிகமாக ஏதும் மிச்சமிருக்கப் போவதில்லை.
எங்கள் சமயங்கள் இரண்டாம் பட்சமானவையே. முதலில் நாம் இலங்கையர்கள். ‘உங்கள் சமயம் எது?’ என்று என்னிடம் கேட்கப்படுகையில் நான் ஒரு சமயஞ் சார்ந்தவராக இருப்பதால் சொல்லவேண்டி வருகிறது. ஆனால், நான் ஒரு குடும்பஸ்தராக இருப்பேனாக இருந்தால், நான், ”என்னுடைய சமயம் எனக்கு இரண்டாம் பட்சமானது. நான் ஓர் இலங்கையன்” என்றுதான் பதில் சொல்வேன். நான் நினைக்கிறேன், இதுதான் நம் அனைவரையும் ஒருங்கே பிணைக்கின்ற விடயம்.
முஸ்லிம்களாகிய உங்களைப் பார்த்துப் பல்வேறு பட்டோர் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எங்கள் எல்லோரிடமும் குறைபாடுகள் இருக்கின்றன. என்றபோதிலும், நான் முஸ்லிம் சமூகத்தில் காணும் மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்றை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விழைகிறேன்.
ஆயிரக்கணக்கான வருடங்கள் வரலாறு உள்ள சிங்கள – தமிழ் மக்கள் 30 வருடகாலம் ரத்தம் சிந்தி ஒருவரை ஒருவர் கொன்று குவித்த யுத்தமொன்றுக்கு முகம் கொடுத்ததன் பின்னர், ஒருவரோடொருவர் உரையாட முடியவில்லை, மொழிப் பிரச்சினை. இவ்விடத்தில் இரு தரப்பையும் ஒருங்கிணைக்கும் தரப்பாக முன்னிற்கும் ஆற்றல் இருப்பது முஸ்லிம் சமூகத்திடம்தான். உங்களில் அனேகமானோருக்குச் சிங்கள மொழி தெரியும். தமிழும் தெரியும். இவ்விடத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சீரழிவு என்று புறந்தள்ளாமல், செல்வம் என்று கொள்ள முடியுமாக இருந்தால், இவ்விரு தரப்புக்கும் இடையில் பாலம் அமைக்கும் பெரும் பணிக்கு முஸ்லிம் சமூகத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறே முஸ்லிம் சமூகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய நிறையப் பாடங்கள் உள்ளன. அண்மைய வரலாற்றிலே 71 இல் சிங்கள இளைஞர்கள் ஆயுதமேந்தினார்கள். 87 இல் ஆயுதமேந்தினார்கள். தமிழ் இளைஞர்கள் 81 இல் இருந்து 2009 வரை கையில் ஆயுதமேந்தினார்கள். இந்தக் காலகட்டத்து இலங்கை வரலாற்றில் முஸ்லிம் இளைஞர்கள் அவ்விதம் ஆயுதமேந்தவில்லை. நான் சொல்ல விழைவது, இது உரத்துச் சொல்லப்பட வேண்டும்.
இரண்டாவது விடயம், உலகத்தில் டயஸ்போரா என்றொரு சமூகம் உள்ளது. தமிழ் டயஸ்போரா, சிங்கள டயஸ்போரா என்று இருக்கிறது. இலங்கைக்கான முஸ்லிம் டயஸ்போரா என்றொரு சமூகம் பெரியளவில் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் இந்த நாட்டைக் கைவிட்டுப் போகவில்லை. இந்த நாட்டிலேயே இருந்தார்கள். நான் நினைக்கிறேன், இதுவும் சொல்லப்பட வேண்டும்.
இறுதியாக நான் ஆரம்பத்தில் சொன்னதையே வலியுறுத்திச் சொல்ல விழைகிறேன், பிளவுபட்ட நாட்டை ஒன்றிணைக்கும் பணியில் முஸ்லிம் சமூகம் ஒரு பெரும் பங்கை வகிக்க முடியும். என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் நான் இதனைச் சொல்கிறேன். மிகவும் கஷ்டமான சந்தர்ப்பங்களில் இணைப்பாளர்களாகச் செயற்படும் ஆற்றலுள்ள சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கிறது.
இவ்வாறு நம்மிடையில் உள்ள பெறுமானங்களை முன்னிலைப்படுத்த வேண்டும். குறைகளைத் தேடுவதாக இருந்தால் வேண்டிய மட்டும் அவற்றைத் தேடலாம். அவற்றைக் காட்டி மோசமானதை மேற்கிளப்புவதா, நல்லவற்றை மேற்கிளப்பி நாம் ஒருவரோடொருவர் நெருக்கமாகி, நல்லவற்றுக்கு முன்னுரிமை அளித்து நாம் அனைவரும் சேர்ந்து உயர் நிலைக்குச் செல்வதா என்று சிந்திக்க வேண்டும்.
என்னுடைய பெயரை எடுத்துக் கொண்டால், அதிகம் பேருக்குத் தெரியாது. ஆனால், அண்மையில் தெருவில் நின்று கூச்சலிட்ட தேரரின் பெயர் இந்நாட்டில் அனேகமானோருக்குத் தெரியும். கெட்டவற்றுக்கும் மோசமானவற்றுக்கும் கிடைக்கும் பிரசித்தம் அபரிமிதமானது. என்றாலும், நல்லவற்றுக்குக் கிடைக்கும் பிரசித்தம் மிகக் குறைவானது.
முஸ்லிம் சமூகத்தில் உள்ள நல்ல அம்சங்களை மேலெழுப்ப முடியுமாக இருந்தால், நாம் இங்கு கலந்துரையாடும் நல்லிணக்கம் சார்ந்து அவர்களிடமிருந்து மிகப்பெரும் பங்களிப்பொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.