• Sat. Oct 11th, 2025

புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்

Byadmin

Aug 21, 2018

(புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்)

இம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி, இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கடந்த 2009-ம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், அன்று முதல் பாதுகாப்பு கருதி அந்நாட்டு மண்ணில் கிரிக்கெட் விளையாட இதுவரை எந்த அணியும் முன்வராமல் பாகிஸ்தான் தனிமை படுத்தப்பட்டுள்ளது.

பின்னர், இந்த துரதிஷ்டமான சூழலில் இருந்து அந்நாடு மீண்டு வர பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டவர் நஜம் சேதி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவரது பதவிக் காலம் 2017-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக வாக்களித்து 2020-ம் ஆண்டு வரை மீண்டும் தலைவராக தேர்வு செய்தனர்.

இதற்கு காரணம், இவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது, இருபதுக்கு – 20 போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்தது மற்றும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் அறிமுகம் என பல சிறப்புக்களை பாகிஸ்தான் பெற்றதால் இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் காபந்து முதல்வராக 2013-ம் ஆண்டு இவர் பதவி வகித்த போது நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷரிப் கட்சி நூலிழையில் ஆட்சியை கைப்பற்றியது.

அந்த தேர்தலில் 35 தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதற்கு நஜம் சேதி துணையாக இருந்ததாகவும் இம்ரான் கான் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவற்றை மறுத்த நஜிம் சேதி, இம்ரான் கான் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியதாக அவர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தை ஏற்றுகொண்ட இம்ரான் கான், உடனடியாக எஸ்சன் மனி என்பவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *