(காங்கேயனோடை பள்ளிவாசலின் அதிசிறந்த முன்மாதிரி, ஏனைய ஊர்களும் பின்பற்றுமா?)
போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக இலங்கை முஸ்லிம் அமைப்புகள் தமது செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
கடந்த காலங்களில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக பள்ளிவாசல்களில் ஜும்ஆ பிரசங்கங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் இடம்பெற்றன. எனினும் அவற்றை வருடத்தில் ஓரிரு தினங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதும் அதற்கென தனியான நிறுவனங்களை உருவாக்க வேண்டியதும் அவசியமாகும்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள ஜாமிஉல் மஸ்ஜித் ஜும்ஆப்பள்ளிவாசலில் போதைவஸ்த்துக்களோ புகைத்தல் பொருட்களோ பாவிக்கமாட்டோம் அல்லது அவற்றுக்குத் துணை போகமாட்டோம் என அப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அனைவரும் பொது மக்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளமை வரவேற்கத்தக்கதும் முன்மாதிரிமிக்கதுமான நிகழ்வாகும்.
அதேபோன்று கடந்த ஹஜ் பெருநாள் தினத்தன்று புத்தளம் மாவட்டத்தில் உள்ள கணமூலை பிரதேசத்திலும் இதேபோன்று பள்ளிவாசல் நிர்வாகிகறாம் மக்களும் போதைப் பொருள் பாவனையை தமது பிரதேசத்திலிருந்து துடைத்தெறிய உறுதிபூண்டுள்ளனர். இவ்வாறு சகல பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் முன்வந்து முஸ்லிம் சமூகத்தைப் பீடித்துள்ள போதைப் பொருள் பாவனை எனும் சீர்கேட்டிலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க பாடுபட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.
போதைப் பொருளுக்கு எதிராக முஸ்லிம்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்த நடவடிக்கைகளை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர் நிலங்க சமரசிங்க பாராட்டியிருந்தார். எனினும் இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
போதை வியாபாரிகளால் இன்று இளம் தலைமுறையினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் முயற்சிகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஏன் பல முஸ்லிம் பிரதேச பாடசாலைகளில் கூட மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் ஊடுருவியுள்ளது. பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை இடம்பெற்று வருகிறது. எனினும் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் பொலிசாரும் அதிகாரிகளும் தோல்வியடைந்துள்ளனர்.
எனவேதான் போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இது விடயத்தில் அரசு தாமதியாது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இஸ்லாம் போதையை ஹராமாக்கியுள்ளது என்ற வகையில் போதைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பாரிய கடப்பாடு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. இது விடயத்தில் பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.
குறிப்பாக இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் இணைந்து தத்தமது பிரதேசங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலை நிர்வாகங்களின் கடப்பாடாகும். இதன் மூலம் நமது சமூகத்தில் போதைவஸ்துப் பாவனையை கட்டுப்படுத்த முடியுமாகவிருக்கும்.
அதேபோன்று முஸ்லிம் சமூகத்தில் போதைக்கு அடிமையானோருக்கு தேபோன்று முஸ்லிம் சமூகத்தில் போதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையங்கள் இல்லாமையும் கவலைக்குரியதாகும். இவ்வாறான நிறுவனம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இது தொடர்பிலும் சகலரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.
(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)