• Mon. Oct 13th, 2025

அமெரிக்காவை மிரட்டும் அதிசக்தி வாய்ந்த புயல்- 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு

Byadmin

Sep 14, 2018

(அமெரிக்காவை மிரட்டும் அதிசக்தி வாய்ந்த புயல்- 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு)

அமெரிக்காவில் மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை தாக்குவது உண்டு.

சில புயல்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அதே போல் ஒரு புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் புயல் அமெரிக்காவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு புளோரன்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

புயல் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, அதிசக்தி வாய்ந்த புயலின் வரிசையில் 3-வது இடத்தை வகிப்பது ஆகும். எனவே, இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை இலாகா கணித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

எனவே, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தர விடப்பட்டுள்ளது.

இதன்படி 17 லட்சம் பேரை வெளியேறும்படி கூறி உள்ளனர். அவர்கள் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தெற்கு கரோலினாவில் ஒரு ஜெயிலில் இருந்த ஆயிரம் கைதிகளையும் வெளியேற்றி இருக்கிறார்கள். மீட்பு படையினர் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தெற்கு கரோலினா கவர்னர் ராய்கூப்பர் கூறும் போது, மிகப்பெரிய ஆபத்து வீட்டின் வாசலில் வந்து நிற்கிறது. மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவைப்படுபவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டு கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

இந்த புயலால் 193 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடையும். கடல் கொந்தளிப்பால் தண்ணீர் ஊருக்குள் புகும். மேலும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் கூறி உள்ளனர்.

இதே பகுதியில் டயானா, மேத்யூ ஆகிய சக்திவாய்ந்த புயல்கள் தாக்கின. அப்போது ஏற்பட்ட பாதிப்பை விட இப்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். பலருடைய வாழ்க்கையில் சந்திக்காத மிகப்பெரிய புயலை இப்போது சந்திக்க போகிறார்கள் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இதே போல் தெற்கு சீன கடல் பகுதியில் ஓம்போங் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கும் என்றும். இதில் அங்குள்ள லூசான் தீவு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த புயல் சீனாவின் தெற்கு பகுதி, ஹாங்காங், மகாவ் ஆகிய இடங்களையும் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 252 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசும் என்றும் கூறி உள்ளனர்.

இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி இருக்கிறார்கள். சுமார் 4 கோடி மக்கள் இந்த புயலால் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #Florence

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *