(அமெரிக்காவில் நின்று, சவூதிக்கு எதிராக கட்டார் போர்க்கொடி)
எண்ணெய் வளமிக்க பாரசீக வளைகுடா நாடான கட்டாருக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையில் விதிக்கப்பட்டுள்ள இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடைகளை சாடிய கட்டார் நாட்டின் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்-தானி, அது அப்பட்டமாக சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் எனவும் வருணித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தின் 73 ஆவது அமர்வில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஷெய்க் தமீம் இந்தத் தடைகள் அரபு நாடுகளை செயலிழக்கச் செய்துள்ளதோடு அற்ப வேறுபாடுகளுக்காக எமது பிராந்தியத்தில் எமது நாடு பணயம் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு டோஹா எப்போதும் தயாராக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாகக் குற்றம்சாட்டி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கடந்த வருடம் ஜூன் மாதம் 05 ஆந் திகதி கட்டாருடனான இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டித்தன.
சவூதியின் அனுசரணையுடன் இயங்கும் முன்னாள் யெமன் ஜனாதிபதி அப்துல் ரப்பு மன்சூர் ஹாதியின் நிருவாகம், லிபியா, மாலைதீவு, டிஜிபோட்டி, செனகல் மற்றும் கொமொரோஸ் என்பன இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டித்த அணியில் பின்னர் இணைந்துகொண்டன. ஜோர்தான் தனது இராஜதந்திரத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டது.
பின்னர் கட்டார் வெளிநாட்டமைச்சு இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதற்கான தீர்மானம் நியாயப்படுத்த முடியாதது எனவும் பிழையான கருதுகோள்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டதாகும் எனவும் தெரிவித்திருந்தது.
கடந்த 2017 ஜூன் 9 ஆம் திகதி டோஹாவுடன் தொடர்புகளைப் பேணுவதாகத் தெரிவித்து சவூதி அரசாங்கமும் அதன் நட்பு நாடுகளும் டசின் கணக்கான தனிநபர்கள் மற்றும் சொத்துக்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்ததை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு உதவுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை கட்டார் முற்றாக மறுத்தது.
அந்த மாதத்தின் பிற்பகுதியில் சவூதி அரேபியாவும் அதன் தோழமை நாடுகளும் இராஜதந்திர தொடர்புகளை மீள சீர்செய்ய வேண்டுமானால் அல்-ஜெஸீரா தொலைக்காட்சி வலையமைப்பை மூடுவது, ஈரானுடனான உறவுகளைக் குறைத்துக்கொள்வது உள்ளிட்ட 13 அம்ச நிபந்தனைகளை முன்வைத்தன.
சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு, லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு ஆகியவற்றுடனான தொடர்புகளை கட்டார் துண்டிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. நியாயமற்றவை எனத் தெரிவித்து கட்டார் அந்த நிபந்தனைகளை நிராகரித்தது என்றார்.
– M.I.Abdul Nazar-