• Sat. Oct 11th, 2025

தலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்

Byadmin

Oct 18, 2018

(தலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்)

உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்… எனப் பல பிரச்சனைகள் காரணமாக, நரம்புகள் வீக்கம் அடைந்து தலைவலி ஏற்படுகிறது. தலைவலிக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதைவிட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா ?

மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம்.

செர்ரிப் பழத்தில் `ஆந்தோசயானின்’ (Anthocyanin) என்னும் நிறமி உள்ளது. இது நரம்பு வீக்கத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. தினமும் காலையில் செர்ரிப் பழத்தைச் சாப்பிடுவதால், மூளை நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். இதனால், காலை அலுவலகத்துக்குச் செல்லும்போது ஏற்படும் அதீத சத்தம், இரைச்சல் மூலம் ஏற்படும் தலைவலியில் இருந்து தப்பிக்கலாம். இது நாளை இனிமையாகத் தொடங்க உதவும்.

மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்திவந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

நாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலைசெய்பவர்கள், சில வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டாலே இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்துவிடலாம். சிப்ஸ், ஜாம், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற நைட்ரேட், எம்எஸ்ஜி சேர்க்கப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தைக் கைவிடவேண்டியது அவசியம். ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன் உள்ளிட்டவை வலியை அதிகரிக்கும்.

எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது நாக்கு வறண்டு போவதை தடுக்கும்; மூளை நரம்புகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

செரிமானக் கோளாறுகளாலும் தலை நரம்புகளில் வலி, வாந்தி வரும் உணர்வு உள்ளிட்டவை ஏற்படும். இதற்குச் சீரகம், இஞ்சி, ஓமம் ஆகியவை சிறந்த மருந்துகள். இவற்றில் தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் குடித்தால் வலி நீங்கி உடல் புத்துணர்வு பெறும். கிரீன் டீ அருந்துவதும் தலைவலி போக்க நல்ல வழிமுறை.

50 கிராம் சீரகத்தை அரைத்துப் பொடியாக்கி, 50 கிராம் தேனில் கலக்கவும். இந்தக் கலவையை, எலுமிச்சைச் சாற்றில் கலந்து, ஏழு நாட்கள் வெயிலில் உலரவைக்கவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து மில்லி கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால், நாள்பட்ட தலைவலி குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *