• Sun. Oct 12th, 2025

உக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது- அதிபர் அறிவிப்பு

Byadmin

Dec 27, 2018

(உக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது- அதிபர் அறிவிப்பு)

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து அசோவ் கடற்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி ராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு மாத காலம் இந்த சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் எல்லை பிராந்தியங்களில் அமலில் உள்ள ராணுவச் சட்டம் இன்றுடன் (புதன்) முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நேற்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பான அனைத்து கூறுகளையும் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். #UkraineMartialLaw #Crimea #UkrainePresident

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *