• Sat. Oct 11th, 2025

சவூதி முடிக்குரிய இளவரசரை பற்றிய 5 விஷயங்கள்

Byadmin

Jun 22, 2017
சவூதி மன்னராக தன்னுடைய தந்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சவூதி இளவரசர் மொஹமத் பின் சல்மான் சீராக படிப்படியாக வளர்ந்தார். தற்போது, தனது தந்தைக்கு ஒருபடி பின்னே இருக்கிறார்.
29 வயதில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இளவரசர் மொஹமத் செளதி அரேபியாவின் அடுத்த ஆட்சியாளராக வரும் வரிசையில் முதலாவதாக இருக்கும் இளவரசர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
தன்னுடைய குடும்பக் கிளைக்கு அதிகாரத்தை குவித்தவர்
புதிதாக நியமிக்கப்பட்ட முடிக்குரிய இளவரசர், தனது தந்தையிடம் அவர் அரசராவதற்கு முன்பிருந்தே மிகவும் நெருக்கமாக இருந்தார். 2009 ஆம் ஆண்டில், இளவரசர் மொஹமத், அப்போது ரியாத்தின் ஆளுநராக இருந்த, தன் தந்தைக்கு சிறப்பு ஆலோசகரானார்.
சௌதியின் புதிய பட்டத்து இளவரசரின் பின்னணி என்ன?
இருப்பினும், இது போன்ற தீவிரமான மாற்றங்களைப் பார்த்துப் பழக்கப்பட்டிருக்காத சவூதி அரேபியாவில், இவரது உயர்வு என்பது சற்று அசாதாரணமானதுதான்.
2015ம் ஆண்டு ஏப்ரலில், சவூதி மன்னர் தனக்குப் பின்னர் ஆட்சிக்கு வர புதிய தலைமுறை ஒன்றை நியமித்தபோது, இளவரசர் மொஹமத்தின் அரசியல் பயணத்தில் மிகப் பெரிய ஏற்றம் உண்டானது.
அரசரின் ஒன்றுவிட்ட சகோதரரான முக்ரின் பின் அப்துல் அசிஸுக்கு பதிலாக மொஹமத் பின் நயேஃப் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்ட நிலையில் அசிஸ் ஒதுக்கப்பட்டார்.
அதிலும் முக்கியமாக சல்மானின் மகன், முடிக்குரிய துணை இளவரசராக நியமிக்கப்பட்டார்.
முடிக்குரிய புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள மொஹமத் பின் சல்மான் பாதுகாப்புத்துறை அமைச்சராக தொடர்ந்து நீடித்து கொண்டே நாட்டின் துணை பிரதமராகவும் இருப்பார்.
பாதுகாப்புத்துறைக்கு அதிக முக்கியத்துவம்
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சல்மான் பின் அப்துல் அசிஸ் மன்னராக பொறுப்பெற்றவுடன், சில விரைவான மாற்றங்களை செய்தார். அது, அவருடைய மகனுக்கு ஆட்சியில் சிறந்ததொரு நிலையை பெற்று தந்தது.
தன்னுடைய 29 வயதில் உலகிலே இளம் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இரண்டு மாதங்கள் கழித்து, அண்டை நாடான ஏமன் மீது செளதி தலைமையிலான கூட்டணிப் படைகள் ராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தின.
எண்ணெய் வளத்தை குறைவாக சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை விரும்புபவர்
ஏப்ரல் 2016ல், செளதியின் பொருளாதார மற்றும் மேம்பாட்டு கொள்கைகளின் தலைவர் பதவியையும் வகிக்கும் இந்த செல்வாக்கு மிக்க இளவரசர், அரசாங்கம் எண்ணெய் வருவாயையே அதிகம் சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை வெளியிட்டார்.
விஷன் 2030 என்றழைக்கப்படும் திட்டத்தின்படி, ”2020க்குள் நாம் எண்ணெய் நம்பி வாழ வேண்டிய தேவை இருக்காது” என்றார்.
அவர் முன்னணிக்கு வந்ததிலிருந்து, சௌதி அரேபியர்களுக்கு அவர் ஒரு `முன்மாதிரியாகக்“ காட்டப்படுகிறார்.
சர்வதேச நாணய நிதியமானது, இத்திட்டத்தை “பேரார்வமிக்க, மற்றும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி“ என்று வர்ணித்தது. ஆனால், அதனை செயல்படுத்துவதென்பது சவலாக இருக்கும் என்றும் எச்சரித்தது.
இரான் உறவுகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது
கடந்த மாதம், எதிராளி நாடான இரானுடன், செளதி எவ்விதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாது என்று இளவரசர் மொஹமத் கூறினார். சிரியா மற்றும் ஏமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருநாடுகளும் எதிர் பக்கங்களை ஆதரித்து வருகின்றனர்.
முக்கிய ஷியா மதகுரு நிம்ர் அல்-நிம்ரை செளதி அதிகாரிகள் தூக்கிலிட்டவுடன் செளதி மற்றும் இரான் இடையேயான உறவு மேலும் மோசமானது.
குடும்பஸ்தர் மொஹமத் பின் சல்மான்
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிறந்த மொஹமத் பின் சல்மான், அரசர் சல்மானின் மூன்றாவது மனைவிக்கு பிறந்த குழந்தைகளில் மூத்தவராவர்.
பெரும்பாலான செளதி இளவரசர்களை போல் அல்லாமல், தன்னுடைய கல்வியை சவூதி அரேபியாவிலேயே முடித்தார். அவருக்கு ஒரே ஒரு மனைவி. அவர்களுக்கு இரு மகள்களும் மற்றும் இரு மகன்களும் இருக்கின்றனர்.
-bbc –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *