• Sat. Oct 11th, 2025

கரடியிடம் சிக்கி இரத்த வெள்ளத்தில் திரும்பிய இளைஞன் (வில்பத்து)

Byadmin

Jun 23, 2017
பெண் கரடியுடன் இளைஞனொருவன் நேருக்குநேர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவமொன்று, மஹவிலச்சிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பத்துவ சரணாலயத்தின் எல்லையில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கடும் காயமடைந்த இளைஞன், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.அந்த இளைஞனின் தலை, கைகள், வயிறு மற்றும் முதுகில் கூரிய நகக்கீறல் காயங்கள் மற்றும் கடுமையான கடி காயங்களும் காணப்படுகின்றன. கடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளமையால், சத்திர சிகிச்சைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வில்பத்துச் சரணாலயம் மற்றும் சரணாலயத்தின் எல்லைகளுக்கு நான்கு இளைஞர்கள் சென்று அங்கிருக்கின்ற மரங்களில் ஏறி, பழங்களைப் பிடுங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

எனினும், உணவு தேடிக்கொண்டு தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வந்த அப்பெண் கரடி, அந்த நால்வரையும் கண்டுவிட்டது. அச்சமடைந்த அந்த நால்வரும் சத்தமிட்டு, கரடியையும் அதன் குட்டிகளையும் விரட்டுவதற்கு முயன்றுள்ளனர். எனினும் பயமின்றி வந்த அந்தப் பெண் கரடி, அந்த இளைஞன் மீது பாய்ந்துள்ளது. அந்த இளைஞனும், பெண் கரடியை ஓங்கி எத்தியுள்ளான். அப்போது தூக்கியெறியப்பட்ட கரடி, மிக உயரத்துக்குச் சென்று கீழே விழுந்துள்ளது என்றும் அதன் பின்னரே, அவ்விளைஞனை கரடி சரமாரியாகத் தாக்கியதாக கரடியிடமிருந்து தப்பிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கரடிக்கும் மேற்படி இளைஞனுக்கும் இடையில் நேருக்குநேர் மோதல் இடம்பெற்றபோது, தாங்கள் ஒளிந்திருந்து பார்த்ததாகவும் அப்போது, குட்டிக்கரடிகள் இரண்டு மரத்தின் மீதேறி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரத்தவெள்ளத்தில் இளைஞன் மயங்கி விழுந்ததையடுத்து, தன்னுடைய குட்டிகளுடன், அக்கரடி காட்டுக்குள் சென்றதையடுத்தே, நண்பனை காப்பற்றி வைத்தியசாலையில் சேர்த்ததாக, அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *