(மஹிந்த ராஜபக்ஷ JVP இடையே இடம்பெற்ற சந்திப்பு விபரம்)
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜே.வி.பியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஜே.வி.பியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத் மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இதேநேரம், ஒன்றிணைந்த எதிரணின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கும், ஜே.வி.பியினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிததுள்ள ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, அரசியமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை பொதுமக்கள் கருத்துக் கணிப்பின் ஊடாக நிறைவேற்றுவதற்கு இடமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்திருந்த எதிர்க்கட்சித் தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் கொள்கை அடிப்படையில் இணங்கியிருந்ததாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாடாளுமன்ற தேர்தல் முறைமை மற்றும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தரப்பினர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.