(20வது அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பட வேண்டாம் – CTJ)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்திற்கு முழுமையான
அதிகாரத்தை கொண்டுவரும் வகையில் மக்கள் விடுதலை முன்னனி சார்பில் 20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. 20வது அரசியல் சீர்திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படுவது சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்பதால் 20வது சீர்திருத்தம் வெற்றியளிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்க வேண்டாம் என்று எதிர்கட்சி தலைவரும் முன்னால் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேரில் சந்தித்து சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
நேற்றைய தினம் (06.03.2019) எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளது.
20வது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வேண்டி எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர்கள் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்றை நடத்திச் சென்ற பின்னர் எதிர்கட்சி தலைவரை சந்தித்த சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் 20வது சீர்திருத்தத்திற்கு உடன்பட வேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்கள்.
அமைப்பின் தலைவர் MLM ரிஸான், பொதுச் செயலாளர் அப்துர் ராசிக், பொருளாலர் ரஜய் முஹம்மத், துணை தலைவர் சில்மி மற்றும் துணை செயலாளர்களான ரஸ்மின், நபான், ரிஸான், சிராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினரே எதிர்கட்சி தலைவரை சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது என்பது எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பரிப்பதற்கும், சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியாமல் திண்டாடுவதற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து விடும். பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் போது அது சிறுபான்மை மக்களை அனைத்து விதங்களிலும் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க செய்து விடும். ஆகவே நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் எதிர் கட்சி தலைவரிடம் கோரியது.
அதே நேரம், புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. குறித்த புதிய அரசியல் யாப்பில் நாட்டையும், நாட்டு மக்களையும் காவு கொடுக்கும் வகையில் பல சிக்கல்கள் உள்ளன.
ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குதல், மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதின் மூலம் ஒருமித்த நாடு என்ற கோஷத்தின் கீழ் நாட்டை ஒன்பதாக பிரிப்பது, வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல். அரசியல் யாப்பு நீதிமன்றம் என்ற பெயரில் தனியான நீதிமன்ற உருவாக்கம். அரசியல் யாப்பு நீதி மன்ற நீதிபதிகளை வெளிநாடுகள் விசாரனைக்கு உட்படுத்தும் வகையிலான திருத்தத்தின் மூலம் நாட்டின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இவையனைத்தும் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி பெரும்பான்மை மக்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்குவதுடன், இனப் பிரச்சினைக்கான தீர்வாக இல்லாமல் இனப் பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும் காரியமாகவே இருக்கப் போகிறது. என்பதும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர் கட்சி தலைவருக்கு சுட்டிக் காட்டப்பட்டது.
அத்துடன் புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
புதிய அரசியல் யாப்பு விவகாரத்தில் தான் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும், தற்போதைய நிலையில் அது சாத்தியமற்றது என்றும் தெரிவித்த எதிர்கட்சி தலைவர் அவர்கள். 20வது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் இல்லையென்றும் அது தொடர்பில் மேலதிக கவனமெடுப்பதாகவும் தெரிவித்தார்.
20வது அரசியல் சீர்திருத்தம் மற்றும் புதிய அரசியல் யாப்பு ஆகியவற்றில் நாட்டுக்கும் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்படப் போகும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டும் விதத்திலமைந்த எழுத்து மூலமான கோரிக்கையும் இந்த சந்திப்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
-ஊடகப் பிரிவு,சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ