(சிறுவன் கடத்தப்பட்டு , 35 இலட்சம் கப்பம் கோரப்பட்ட சம்பவம் முடிவுக்கு வந்தது… )
சிறுவன் கடத்தப்பட்டு , 35 இலட்சம் கப்பம் கோரப்பட்ட சம்பவம் முடிவுக்கு வந்ததுவவுனியா, நெடுங்கேணி, பெரியமடு பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் எட்டு வயது சிறுவன் கனகராயன்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெரியமடு பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினூடாக சென்றிருந்த நிலையில் சிறுவன் காணாமல் போயுள்ளதாக தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பொலிஸில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த சந்தர்ப்பத்தில் சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், 35 இலட்சம் ரூபா தந்தால் அவரை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.
காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், கடத்தப்பட்ட சிறுவனும் இதன்போது தொலைபேசியில் பேசியுள்ளார்.
குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதனடிப்படையில் வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் இந்த கடத்தல் நாடகத்தின் பின்னணியில் சிறுவனின் தயாரும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.