• Sun. Oct 12th, 2025

அறிந்ததும் தெரிந்ததும்.

Byadmin

Mar 18, 2019

(அறிந்ததும் தெரிந்ததும்)

அமேசன் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) இன்றைய தேதியில் உலகிலுள்ள மிகப் பெரும் செல்வந்தர். அவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு 131பில்லியன் டாலர்கள்( ரூபா 23 412 000 000 000).

இவ்வளவு பெரும் சொத்துக்கள் உள்ள ஜெஃப் தானே உலகின் நம்பர் வன் பணக்காரர் என்றால் ம்ம்ஹூ என்கிறது கூகள்.  ஒகே அப்படியானால் உலகின் நம்பர் 1 பணக்காரர் யார்?

இந்த தேடலுக்கு  விடையாக வருகிறார் ஒரு ஆபிரிக்க நாட்டவர். “ஆ.. ஆபிரிக்க நாட்டவரா?”“ஆமா ஆபிரிக்க நாட்டவரே தான்”.  அது மட்டுமல்ல இன்றுவரை வாழ்ந்தவர்களுள் இவரை விட பெரிய பணக்காரர் வேறு யாருமே இல்லை எனுமளவிற்கு  மிகப் பெரும் பணக்காரராக இருந்தவர் தான் இந்த ஆபிரிக்கர். அவர் தான் “தங்க மன்னன்” என்று வரலாறு செல்லமாக அழைக்கின்ற மன்சா மூசா. மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் மன்னர். இன்னுமொரு ஆச்சரியம்! அவரது மொத்த செல்வத்தின் பெறுமானம்  எவ்வளவு என்பது இன்றுவரை கணக்குப் பார்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. மன்சா மூசாவின் செல்வத்தோடு ஒப்பிடும்போது ஜெஃப் உடைய செல்வம் போலியோ சொட்டு மருந்தின் அளவை போன்றது.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதுதான் அன்றைய புரியாத புதிர், 14ம் நூற்றாண்டு சந்திர மண்டலப் பயணம். அந்தப் புதிருக்கு விடை தேடி ஆர்ப்பரிக்கும் அலைகளை பிளந்து கொண்டு ஒரு பெரும்கூட்டம் போகிறது ஒரு பெரும் கடற்பயணம். அது சும்மா கிம்மா பயணம் கிடையாது. மொத்தமாக ஈராயிரம் கப்பல்கள் எல்லாமே அன்றைய போயிங் 737 மக்ஸ் 8 தாயாரிப்புக்கள், ஒவ்வொரு கப்பலிலும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் , கூடவே அவர்களின் அடிமைகள். அவர்கள் எல்லோருமே கடல் மீது அளவிலா காதல் கொண்ட கடல் வெறியர்கள் என்பது தான் அவர்களுக்குள் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை. அந்தப் பென்னம் பெரிய  கடற் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் தான் மன்சா அபுபக்கர்.  மாலியின் அன்றைய மா மன்னர். யாருடைய துரதிர்ஷ்டமோ போனவர்கள் போனவர்கள் தான், அந்தோ பரிதாபம் யாரும் மீண்டும் திரும்பி வரவே இல்லை.. எப்படி கடந்த வருடத்தில் மலேசிய விமானத்தில் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற கதை நமக்கு தெரியாதோ  அது போலத் தான், இவர்களுக்கும் என்ன நடந்தது என்று இன்று வரை யாருக்கும் தெரியாது.

கடற் பயணம் போன அண்ணன்,  தம்பிக்கு அழகிய கடற்கன்னிகளை பிடித்துக் கொண்டு இன்றோ, நாளையோ வருவான் என்று வழி மேல் விழி வைத்து பார்த்திருந்த மூசாவுக்கு வேறு வழியில்லாமல் அண்ணனின் ராஜ்ஜியத்தை பொறுப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு வயது வெறும் 32. இருந்தாலும் இனி அவர்தானே மன்சா மூசா.  சிங்கத்தின் தம்பியும் சிங்கம் தான் என்பது போல அவருடைய ஆட்சியின் கீழ், மாலி இராச்சியம் விஸ்வரூபம் எடுத்து கணிசமாக பெருத்து வளர்கின்றது. இன்றைய திம்புக்டு உள்ளிட்ட 24 பெரு நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்டு மாலி  இராச்சியத்தின் கீழே வருகின்றன. இப்படியாக  இன்றைய நைகரிலிருந்து, செனகல், மொரித்தானியா, மாலி, பர்கினா பசோ, நைகர், காம்பியா, கினி பிசாவ், கினி மற்றும் ஐவரி கோஸ்ட் வரையிலான முழு நிலப்பரப்புமே ஒவ்வொன்றாக மன்சா மூசாவின் கவரேஜ் எல்லைக்குள் வருகின்றன. இவைகள் எல்லாம் நிலங்கள் மட்டுமல்ல பொன் விளையும் பூமிகளும் தான்.

எங்கெல்லாம் தங்கம் இருக்கிறது அங்கெல்லாம் வியாபாரம் கொழிப்பது வழமை தானே என்ற நாட்டுப்புற அரேபிய பாடலுக்கு அமைய இங்கேயும் வர்த்தகம் தழைத்தோங்குகிறது. இன்றைய சீனாவைப் போல் உலகின் ஒட்டுமொத்த வியாபாரமும் அவர்களின் கைகளில். அன்றய நாட்களில் வெளிவராத போர்ப்ஸ் சஞ்சிகையின் கணக்குப்படி உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வருகிறார்  மன்சா மூசா. இதற்கு காரணம் ஒட்டு மொத்த உலக தங்கத்தின் அரைப்பகுதிக்கு மேல் மன்சா மூசாவின் கஜானாவில் இருந்தது தான். நல்ல காலம் அன்று அமெரிக்கா என்ற ஒரு நாடோ அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமோ இருக்கவில்லை மன்சாவை கொல்வதற்கு.

என்ன தான் மன்னாதி மன்னனாக, நம்பர் 1 பணக்காரனாக இருந்தாலும் மனிதனாய் இருந்தால் கவலைகள் இருக்கத்தானே வேண்டும். மனிதனாய் பிறந்த  மன்சாவின் மனத்தையும் ஆழ்ந்த கவலை ஒன்று அழுத்திக் கொண்டேயிருந்தது. அது தான் இதுவரை தானோ அல்லது தனது சாம்ராஜ்யத்தை ஆண்ட முன்னைய மன்சாக்கள் யாருமே ஹஜ் பயணம் போகவில்லையே என்ற பெருங் கவலை. அந்தக் கவலையை நீக்கவும் , என்னதான் பணக்காரனாக இருந்தாலும் ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டானே பாவி  என்று எதிர்காலத்தில் இந்த பேஸ்புக் போராளிகள் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவும்  மக்காவிற்கு புனித யாத்திரைக்கு செல்ல முடிவு செய்தார் மன்சா மூசா. தனது பரம்பரையின் கறை துடைக்கும்  இந்தப் புனிதப் பயணத்தை மிக  உன்னதமாக மாற்ற வேண்டும் என்று திட்டமும் தீட்டினார், மிக்க பக்தியுள்ள மனிதர், நல்ல மன்னர் ,வாரி வழங்கும் கொடை வள்ளல் என்றெல்லாம் போற்றப்பட்ட மன்சா மூசா.

மன்னர் ஹஜ் பயணம் புறப்படுகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய் நாடு முழுக்க பரவியது. மொத்தம் 4,950 கிலோ மீட்டர் நெடுந்தூர தொலைதூரப் பயணம். இதில் முக்கால்வாசி சஹாரா பாலைவனம் மீதி எகிப்திய நிலம். இதுதான் அன்றைய கூகுள் மேப் காட்டிய படம்.

மன்சா மூசா மட்டும் ஹஜ்ஜிற்கு போகவில்லை கூடவே முழு நகரத்தையும் அழைத்துப் போகிறார்.  பாலைவனத்திற்குள்ளால் ஒரு முழு நகரமே நகர்கிறது, கட்டடங்களை தவிர. மந்திரிகள், அரச அதிகாரிகள், படைவீரர்கள், மருத்துவர்கள், வர்த்தகர்கள், ஒட்டக சிப்பாய்கள், தனவந்தர்கள் என ஆண்கள் மட்டும் அறுபதினாயிரம் பேர், அவர்களுக்கு சேவகம் செய்வதற்காகவே 12000 அடிமைகள். பயண வாகனங்களாக கிட்டிய கணக்கில்  பல்லாயிரம் ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள். நான்கு மாத தொலைதூரப் யணத்திற்கான உணவுத் தேவையை சமாளிப்பதற்காக வேண்டி பல நூறு கிலோ மீட்டர் நீளமான செம்மறி ஆட்டுப் பட்டிகள். பயணத்தில் கைச் செலவுக்காக நூறு “தங்க ஒட்டகங்கள்”.  ஒவ்வொரு தங்க ஒட்டகத்திலும்  ஒரு 100 பவுன் கொண்ட தூய பசும்பொன் மூட்டைகள். இப்படியொரு பெருங் கூட்டம் பாலைவனத்தூடே போனால்  எப்படி  ஒரு பிரமாண்டமாய் இருக்கும்!  அப்பாடா பிரமாண்டம் காட்டுவதில் மன்சா மூசாவிடம் கடாபி கூட பிச்சை எடுக்க வேண்டும். அப்படி ஒரு பிரம்மாண்டம்.

இந்த பெரும் கூட்டம் எகிப்தை அடைந்ததும் அங்கிருந்த மக்களுக்கெல்லாம் கை கால் புரியாத மிகப் பெரும் கொண்டாட்டம். இப்படி ஒரு தங்க கூட்டத்தை அவர்கள் வாழ்க்கையில்  இதற்கு முன்னோ பின்னோ  கண்டது கிடையாது. அதுவுமில்லாமல் மன்சா மூசா குறைவில்லாமல் வாரி வாரி வழங்கும் தர்ம சீலர் வேறு. இனி என்ன முழு எகிப்திற்கும்  பெரு நாள்தான். கய்ரோ எங்கும் தங்க மரம் முளைத்து பூத்துக்குலுங்குகிறது போன்ற  ஒரு பிரமை. மன்சாவின்  இந்த தாராள தர்மத்தினால் பத்து வருடங்களுக்கு எவ்வித தொழிலும் செய்ய தேவை இல்லாத அளவு தங்கத்தை ஒவ்வொரு உள்ளூர்வாசியும்  நன்கொடையாக பெற்றனர். தர்மம் என்றால்  அப்படி ஒரு தர்மம். சும்மா சட்டப்படி,  சும்மா கிடைத்த தங்கத்தை வைத்துக் கொண்டு எல்லோரும் வீட்டிலேயே இருந்ததால் எகிப்தின் மொத்த பொருளாதாரமும் அப்படியே நமது நாட்டின் இன்றைய பொருளாதாரம் போல ஸ்தம்பித்துப் போனது. மன்சாவின் இந்த தங்க விபத்தினால் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் அளவு மட்டும் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

ஹஜ்ஜை முடித்து நாடு திரும்புகின்ற வழியில், தான் கொடுத்த கொடை எகிப்து  மக்களை சோம்பேறிகளாக மாற்றியிருக்கிறது என்பதை அறிந்த அவர் மிகக் கவலை கொண்டார். இதற்கு பிராயச்சித்தமாக இனி ஒரு புது விதி செய்வோம் என்று தனது நாட்டின் கல்விக் கண்களை திறப்பதற்கு திடசந்தர்ப்பம் கொள்கிறார் மன்னர் மூசா. இதற்காக வேண்டி மக்காவில் இருந்து திரும்பும்போது தன்னோடு சேர்த்து மார்க்க அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், கட்டடக் கலை நிபுணர்கள் என ஏராளமானோரை மாலிக்கு அழைத்து வருகிறார் தங்க மன்னர். மாலி ஆபிரிக்காவின் கல்வியின் கலங்கரை விளக்காய் மாறுகிறது. திம்புக்டு வருகின்ற ஒவ்வொரு  அறிஞர்கும் 200 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி நிறைய மாணவர்கள் இளைஞர்கள் என பெரிய படித்த பட்டாளமே மாலியிலே படைகொள்கிறது. இது  தான் மாலி ஒரு வல்லரசான தருணம்.

மாலிப் பேரரசிற்கு யாருடைய கண் பட்டதோ தெரியாது  விதியின் விளையாட்டு அங்கே தொடங்குகிறது. பெரும் கொடையாளியாய், ஒரு நல்ல மன்னனாய் ஆட்சி செய்து , ஆபிரிக்காவின் அறிவுக் கண்களைத் திறந்த மன்ஸா மூசா 1337 ஆம் ஆண்டில்  தனது 57 ஆவது வயதில் இறையடி சேர்கிறார். தாளாத கவலையில் துயறுற்றிருந்த மக்களுக்கு இன்னுமொரு செய்தி பேரிடியாக வந்திறங்குகிறது.

அதுதான் அவரை அடக்கம் செய்த அதே குழிக்குள்ளே அவரது சாம்ராஜ்ய கனவுகளையும் அவரது மகன்கள் போட்டு புதைத்து விட்டனர் என்ற செய்தி. என்றாலும் மகா உன்னத சேவையாளராக, கொடையாளியாக, பேரரசனாக இருந்த மன்சா மூசாவின் பெயரை என்றுமே சொல்லும் விதமாய் அவரது காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் திம்பக்டுவில் நின்று நிலைக்கின்றன.

Dr. PM.Arshath Ahamed MBBS MD PEAD 
Senior Registrar in Peadiatric 
Lady Ridgeway Hospital for Children

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *