• Mon. Oct 13th, 2025

“வத்தளை மாபோல, நகரசபையின் பாரிய மோசடி அம்பலம்”

Byadmin

Apr 18, 2019

(வத்தளைமாபோல, நகரசபையின் பாரிய மோசடி அம்பலம் )

UNP வசம் இருக்கும், வத்தளை மாபோல, நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி விற்பனையில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருக்கின்றது.

அதனால் விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் இருக்கும்பொருட்டு நகரசபை செயலாளரை தற்காலிகமாக இடமாற்றியுள்ளோம் என மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இ்டம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வத்தளை நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி கொடுக்கல்வாங்கல் தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் குழுவொன்றை நியமித்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. அதனால் அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்ளும்வகையில் உடனடியாக வத்தளை நகரசபை செயலாளரை இடமாற்றியுள்ளோம்.

மேலும் இந்த காணி விற்பனையில் நகரசபையின் ஏனைய அதிகாரிகள் யாராவது தொடர்பு பட்டிருக்கின்றனரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றோம். அவ்வாறு யாராவது தொடர்பு பட்டிருந்தால் அவர்களையும் இடமாற்ற நடவடிக்கை எடுப்போம். இல்லாவிட்டால் இந்த விசாரணைகளுக்கு அவர்களின் தலையீடுகள் ஏற்படும்.

அத்துடன் மேல்மாகாண அலுவலகம் எந்த கட்சிக்கும் சார்ப்பாக செயற்பட நான் ஆளுநராக இருக்கும்வரைக்கும் இடமளிக்கமாட்டேன். எந்த அழுத்தங்கள் வந்தாலும் நாங்கள் எமது தீர்மானங்களை செயற்படுத்துவோம். அதேபோன்று யார் மோசடி செய்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அஞ்சப்போவதுமில்லை என்றார்.

-எம்.ஆர்.எம்.வஸீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *