• Sat. Oct 11th, 2025

14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி

Byadmin

Jun 11, 2019

(14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி)

துபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமீரகத்தில் இந்த ஆண்டு சகிப்புத்தன்மை ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி துபாய் போலீஸ் துறை சார்பில் கைதிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நீண்டகாலம் பெற்றோர் அல்லது குடும்பத்தினரை சந்திக்காத கைதிகள் மற்றும் அவர்களுடைய சின்ன, சின்ன ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக தனது பெற்றோரை சந்திக்கவில்லை என கூறியிருந்தார்.

அதனை கவனத்தில் கொண்டு துபாய் போலீஸ்துறை சார்பில் அந்த பெண்ணின் பெற்றோர் துபாய்க்கு வரவழைக்கப்பட்டனர். இந்த விஷயம் அந்த பெண் கைதிக்கு தெரியாது. பெற்றோர் வந்ததும் அந்த பெண் கைதிக்கு திடீரென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.

அவர் வெளியில் வந்தபோது, தனது கண் முன் பெற்றோரை பார்த்ததும், இது கனவா அல்லது நிஜமா என்று ஒரு நிமிடம் திகைத்து நின்றார். இதையடுத்து சகஜ நிலைக்கு வந்த அவர் தனது பெற்றோரை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். தற்போது சிறையில் இருக்கும் அந்த பெண் போதை பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார்.

கைவினை பொருட்களை வடிவமைப்பதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அரபி, ரஷியா, இந்தி மற்றும் நைஜீரிய மொழியை கற்றுக்கொண்டுள்ளார். அந்த பெண்ணின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு மனித நேயத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அவரது மாற்றங்களை பார்த்தும், ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்தியதற்காகவும் போலீசாருக்கு அந்த பெண்ணின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். அவரின் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *