(130 குப்பை கொள்கலன்களையும் இங்கிலாந்துக்கே திருப்பி அனுப்பவும்)
பிரித்தானியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள 130 குப்பை கொள்கலன்களையும் திருப்பி அனுப்ப
நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இந்நிலையில், அதற்கான நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் இருந்து 2017ம் ஆண்டில் இருந்து 2487 மெற்றிக்தொன் கழிவுகள் 12 தடவைகளில் இலங்கைக்கு வந்துள்ளன.
இவை 130 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு வந்தோர் தொடர்பில் இதுவரை சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் நாட்டில் தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 2013.07.11ம் திகதி நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கிணங்க இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்படி வர்த்தமானியில் அப்போதைய நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவே கையொப்பமிட்டுள்ளதாகத் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நாட்டின் கைத்தொழில் துறையை பாதிப்படையச் செய்வதுடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்த வர்த்தமானி வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.