(“எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும்” கோட்டாபய)
எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும். இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாவார்கள். எனவே, இன, மத, பேதமின்றி எமது ஆட்சியைக் கொண்டு நடத்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்ட பின்னர் தனது ஆதரவாளர்களுடன் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்கச் சிலர் பல வழிகளில் வியூகங்கள் அமைத்தன. தடைகளைப் போட முயன்றார்கள். ஆனால், அத்தனையையும் நாம் தகர்த்தெறிந்து விட்டோம்.
தேர்தலில் என்னை நேரில் சந்திக்கத் தகுதியில்லாதவர்கள் நீதிமன்றத்தில் எனக்கு எதிராகப் பொய்க்குற்றச்ச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குகளைப் போட்டார்கள்.
இனியும் அவர்கள் வழக்குப் போடுவார்கள். ஆனால், எதற்கும் நாம் அச்சமடையமாட்டோம்.
மக்கள் எம் பக்கம் இருப்பதால் எங்கு சென்றாலும் எமக்கு நீதி கிடைக்கும். வெற்றியும் கிடைக்கும். எனவே, இந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவோம். ஊழல், மோசடிகளிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.