(இலங்கை முஸ்லிம்களின் ஒருமைப்பாடும் வரலாற்றுதாரணங்களும். )
ஆங்கிலத்தில்: பேராசிரியர் பி.ஏ. ஹுஸைன்மியா
தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
ஒருமைப்பாடு, ஒன்றுபடுதல் எனும்
சவால்களைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் ஏன்? எவ்வாறு? தமக்குள் பாரியளவில் வெற்றி கண்டு வருகின்றனர் என்பதற்கான வரலாற்றுதாரணங்களை, முஸ்லிம் பெயர்தாங்கியான ஒரு சில அடிப்பைடைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களின் பின்புலத்தில் அடையாளப்படுத்த முனைகிறேன். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த இனங்களுக்கிடையிலான தேசிய ஒருமைப்பாட்ட்டின் அடித்தளத்தை மேற்குறித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆட்டம் காணச் செய்தன என்றால் மிகையாகாது. எனினும், இலங்கை மக்கள் இன்னுமொரு தொடர் பேரவலத்தை ஒருபோதும் விரும்பவில்லை என்பதால் சமூகப் பிணைப்பை உடையாது பாதுகாத்துக் கொண்டனர்.
2012ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம் மொத்த சனத்தொகையில் 70.1 சதவீதத்தினர் பௌத்தர்களும் 12.6 சதவீதத்தினர் இந்துக்களும் 9.3 சதவீதத்தினர் முஸ்லிம்களும் 7.6 சதவீதத்தினர் கிறிஸ்தவர்களும் ஆவர். முஸ்லிம் சனத்தொகையில் தமிழ் பேசும் சோனகர்களே 95 சதவீதத்தினராக இருக்க, 17ஆம் நூற்றாண்டின் காலனித்துவ வருகையான மலே முஸ்லிம்கள் மற்றும் இந்திய வருகைகளான மேமன், போரா மற்றும் ஹோஜா முஸ்லிம்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இலங்கை முஸ்லிம்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
வரலாற்று ரீதியாக கி.பி. 10ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாம் இலங்கையில் வேரூன்றத் தொடங்கியது. புவியியல் ரீதியாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் கேந்திர நிலையமாக அமைந்துள்ள இலங்கை அன்றைய அரபிகளினால் செரண்டிப் என இனங்காணப்பட்டது.
பொதுவாக அனைத்து விதமான சர்வதேச வணிகர் குழுக்கள் மற்றும் கடலோடிகள் குறிப்பாக அரபு முஸ்லிம்கள், ஈரானியர்கள் மற்றும் தென்னிந்திய வணிகர்களை அன்றைய இலங்கை கவர்ந்திழுத்தது. முஸ்லிம் பேரரசுகளால் கைப்பற்றப்பட்ட வட இந்தியாவைப் போலவோ அல்லது முகலாய பேரரசின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் செயற்பட்ட தென்னிந்திய சிற்றரசுகளைப் போலவோ இலங்கை ஒருபோதும் முஸ்லிம் பேரரசு ஒன்றின் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாகவோ மறைமுகமாகவோ செயற்பட்டதில்லை.
1506இல் இடம்பெற்ற போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னதாக இலங்கை முஸ்லிம்கள், தலைமுறை தலைமுறையாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசர்களின் பெருமாதரவில் எவ்வித பிரச்சினைகளுமின்றி வாழ்ந்து வந்தனர். 1506இல் ஊடுருவிய போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியாளர்களினாலும் 1656இல் ஊடுருவிய ஒல்லாந்து காலனித்துவ ஆட்சியாளர்களினாலும் வர்த்தக மற்றும் மத ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரபு- தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பெரிதும் துன்புறுத்தப்பட்டன.
இருப்பினும், முஸ்லிம் சோனகர்கள் தமது பாரம்பரியங்கள், சம்பிரதாயங்களை உறுதியாகப் பற்றிப் பிடித்தனர். முஸ்லிம்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் நிலவி வந்த காலப்பகுதிகளில் சிங்கள மன்னர்கள் பாதுகாப்புக் குடையை விரித்து காலனித்துவவாதிகளிடம் இருந்து முஸ்லிம்களைக் காப்பாற்றியே வந்தனர்.
இவ்வாறாக, முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் சிங்கள மன்னர்கள் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம்களைக் குடியமர்த்தி அவர்களுக்கு பல்வேறு விதங்களில் உதவியும் புரிந்து வந்தனர். குறிப்பாக கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் இன்றும் முஸ்லிம் குடியிருப்புக்கள் செறிவாக காணப்படுவதற்கு அன்றைய சிங்கள மன்னர்களே வழிசமைத்தனர் என்றால் மிகையாகாது. கிழக்கில் குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயத்தை செவ்வனே மேற்கொண்டு கீழைத்தேசத்தின் தானியக் களஞ்சியமாக இலங்கையை மாற்றினர்.
சிங்கள மன்னர்களின் பேராதரவுக்கு பிரதியுபகாரமாக இலங்கை முஸ்லிம்கள், இந்தியாவை சேர்ந்த சமோரின் அரசு உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அரசுகளுடனான ஏற்றுமதி வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் சிங்கள மன்னர்களுக்கு உதவி புரிந்தனர்.
சிங்களவர்களின் விளைபொருட்கள் அரபு, பாரசீக, மலாய மற்றும் இந்திய வணிகர்களின் சந்தையை சென்றடையும் வகையில் இடைத் தரகர்களாக முஸ்லிம்கள் பணியாற்றி வந்தனர். சிங்களவர்களின் வருடாந்த பெரஹரா வைபவம் உள்ளிட்ட பண்டிகைகளின்போது முஸ்லிம்கள் நடனமாடுபவர்களின், மேளம் இசைப்பவர்களின் வழித்துணையாக சென்று தன்னார்வ தொண்டர்களாக, உதவி ஒத்தாசைகள் புரிபவர்களாக இருந்துள்ளனர். ‘முஸ்லிம்களும் கண்டிய இராச்சியமும்’ எனும் வரலாற்று நூலின் ஆசிரியரும் பிரபல பெண் வரலாற்றாய்வாளரான லோனா தேவராஜாவின் நூல்களில் மேற்குறித்த விடயங்களுக்கான விபரமான சான்றுகளைப் பெறலாம். இவை தவிர சுதேச மருத்துவத்தில் குறிப்பாக ஹோமியோபதி மருத்துவத்தில் கைதேர்ந்த முஸ்லிம்கள் அன்றைய அரசர்களினதும் பரிவாரங்களினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான அரண்மனை மருத்துவர்களாக சேவை புரிந்துள்ளனர். அன்றைய இலங்கை முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நிலவிய சுமுகமான வரலாற்று உறவுகளுக்கு மேற்போந்த விடயங்கள் ஒரு சில எடுத்துக்காட்டுக்களே. பள்ளிவாசல்களை நிர்மாணித்தல், மத்ரஸா உள்ளிட்ட சமய பள்ளிக்கூடங்களை அமைத்தல், குடியிருப்புக்களை உருவாக்குதல், இஸ்லாமிய சமய கிரியைகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் மிக மிக அரிதாகவே அன்றைய பௌத்த சிங்களவர்கள் தலையீடுகளை செய்தனர்.
பிரித்தானியர் ஆட்சியின்போது சிங்கள – முஸ்லிம் உறவு தொடர்ந்தும் நல்ல நிலைமையில் இருந்தாலும் அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்த வண்ணம் இருந்தன. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது வர்த்தகம், கல்வி மற்றும் தொழிற்துறைகளில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரே அதிக வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதாக பெரும்பான்மை பௌத்த சிங்களவர்கள் கருதிக் கொண்டனர். புதிதாக நாட்டில் குடியேறிய கரையோர முஸ்லிம்கள் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே 1915 கலவரம் வெடித்தது.
19ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற பௌத்த தேசியவாத எண்ணக்கரு காலனித்துவ ஆட்சிக்கு மாத்திரமன்றி முஸ்லிம்களின் இருப்புக்கும் வர்த்தக சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக திகழ்ந்தது. இருப்பினும், முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் சமநிலையைப் பேணி நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் தேசிய தலைவர்களும் சிங்கள தலைமைகளுடன் இணைந்து போராடியதன் விளைவாகவே 1948இல் பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் தனிநாடு கோரிக்கைப் போராட்டம் இலங்கையின் அரசியல் தளத்தையே திருப்பிப் போட்டது. 2009இல் எல்.ரீ.ரீ.ஈ. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு சிறுபான்மை முஸ்லிம்கள் இனமுறுகல் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு சில அடிப்படைவாதிகளினால் போதிக்கப்பட்ட தவறான இஸ்லாமிய போதனைகள் தொடர்பான பெரும்பான்மை சிங்களவர்களின் அச்சமும் பீதியுமே தற்போதைய பாரிய சவாலாக நாட்டின் அரசியலில் பேசப்பட்டு வருகின்றது.
முஸ்லிம் அரசியல்வாதிகள், வல்லுநர்கள், ஊழியப் படையினர் என அனைத்து முஸ்லிம்களின் தற்போதைய செயற்பாடுகள், இலங்கை நாட்டில் நல்லிணக்கமும் சமாதானமும் எனும் நீடித்து நிலவ பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் பேரார்வத்துடன் இருப்பதையே காட்டுகின்றன. முன்னெப்போதுமில்லாத வகையில் முஸ்லிம்கள் தமது பள்ளிவாசல்கள், இஸ்லாமிய அமைப்புக்களை பொது மக்களின் பார்வைக்கும் கேள்விக்கும் திறந்து வைத்துள்ளதோடு, கொள்கை வேறுபாடுகள் தொடர்பில் திறந்த கலந்துரையாடல்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
பெரும்பான்மை சிங்களவர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் தமது நடத்தைகளும் வாழ்வியல் விடயங்களும் அமையாதவாறு முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் தளத்தில் சமநிலை குலையாதவாறு அதிசிரத்தையுடன் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். மாற்று மத சகோதரர்களின் உணர்வுகளையும் கருத்திற் கொண்டு ஒரு முன்னுதாரண முஸ்லிமாக மாத்திரமன்றி நற்பிரஜையாகவும் வாழ்ந்து காட்ட வேண்டிய தேவை காலத்தினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களை அடுத்து கட்டுக்கடங்காத வகையில் பாரிய இன முறுகல்கள் பற்றி எரியும் என சிலரால் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் புஸ்வாணமாகிப் போனமை ஒட்டுமொத்த ரீதியில் இலங்கையர்களின் சகிப்புத் தன்மைக்கு தக்கதொரு சான்றாகும். இதற்குப் பிரதியுபகாரமாக நல்லிணக்கம், சகவாழ்வை முன்னிறுத்தி பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்பி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு முன்னால் காத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையர்கள் எனும் பொது அடையாளத்துடன் ஏனைய இனக் குழுமங்களுடன் சமாதானமாக வாழ அவாக் கொள்ளும் அத்தனை முஸ்லிம்களினதும் எதிர்கால விளக்குகள் இன்னும் பிரகாசமாகத்தான் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.