• Sun. Oct 12th, 2025

கொரோனாவை வீழ்த்த மேலும் 2 புதிய மருந்துகள் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Byadmin

May 27, 2021

கொரோனா வைரஸ் தொற்றை மனித குலத்திடம் இருந்து விரட்டியடிப்பதற்கான முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள கியு.ஐ.எம்.ஆர்.பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ‘பெட்டைட்’ அடிப்படையிலான (இது அமினோ அமிலங்களின் கலவை ஆகும்) 2 புதிய மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்துகள் கொரோனாவைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படும். இதை எடுத்துக்கொள்கிறபோது கொரோனா நோயாளிகளின் நோய் தீவிரம் அடையாது.

இந்த புதிய மருந்துகள், பிரான்ஸ் நாட்டில் எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவல்கள், ‘நேச்சர் செல் டிஸ்கவரி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

கொரோனா வைரஸ்

*இந்த மருந்துகளின் ஆரம்ப கால முடிவுகள் நம்பிக்கை அளிக்கின்றன. மருந்துகள் நச்சுத்தன்மையற்றவை. லேசான பக்க விளைவுகளை கொண்டுள்ளன.

*இந்த மருந்துகள் சாதாரணமாக அறை வெப்ப நிலையில் வைத்து சேமிக்கக்கூடியவை. எளிதாக வினியோகிக்க ஏற்றவை.

*முதல் மருந்து கொரோனா தடுப்பு மருந்து ஆகும். இது தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கும். இரண்டாவது மருந்து, ஏற்கனவே பாதிக்கப்பட்ட செல்களில் தொற்று பரவலை தடுத்து நிறுத்தும்.

* முதல் மருந்தின் ஆய்வுக்கூட பரிசோதனையில், அது மனித செல்களில் ஏசிஇ2 ஏற்பி புரதத்தை மூடுவதின் மூலம் தொற்று நோயைக் குறைப்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரசின் ஸ்பைக் புரதம், ஏசிஇ2 ஏற்பி புரதத்தைப் பயன்படுத்தித்தான் மனித செல்களை பிணைக்கிறது, ஆக்கிரமிக்கிறது. பின்னர் வைரஸ் மூடிய பெட்டைட்டுகளுடன் இணைகிறது. இதனால் தொற்று நோய் தடுக்கப்படுகிறது.

* இரண்டாவது மருந்து, ஹோஸ்ட் செல்களை கடத்தி, நகல் எடுப்பதைத் தடுக்கும். மேலும், வைரசை அடையாளம் காணும் வகையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறனை அதிகரிக்கும்.

* இந்த மருந்துகளின் மருத்துவ சோதனைகள் வெற்றி பெற்றால், முதல் மருந்தை, தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க கொடுக்கலாம். இரண்டாவது மருந்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹோஸ்ட் செல்கள் நகலெடுப்பதைத் தடுக்க தரலாம். இதனால் நோய் தீவிரம் அடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *