• Sat. Oct 11th, 2025

கனடாவில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – சர்வதேச விசாரணைக்கும், சகல பள்ளிகளை ஆய்வு செய்யவும் கோரிக்கை

Byadmin

Jun 1, 2021

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது.

அதன் வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இந்த பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தது. 1890-ம் ஆண்டு முதல் 1969- ம் ஆண்டு வரை பள்ளிக்கூடத்தை தேவாலயம் நடத்தியது .பின்னர் அரசு அந்தப்பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தது. 1978-ல் பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

பள்ளியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இன அழிப்பின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.

அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னதாக அங்கு பூர்வகுடி மக்கள் வசித்து வந்தனர்.

அவர்களில் லட்சக்கணக்கான மக்களை கொன்று விட்டு தான் ஐரோப்பியர்கள் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கினார்கள்.

பிற்காலத்தில் இவ்வாறு இனப்படுகொலை செய்வது நின்றது. ஆனால் பழங்குடி மக்கள் பிற்காலத்தில் ஒன்றாக சேர்ந்து பிரச்சினை செய்துவிடக்கூடாது என்பதற்காக பழங்குடிமக்கள் குழந்தை பெற்றதுமே பெற்றோரிடமிருந்து அந்த குழந்தையை பிரித்துக் கொண்டு வந்தனர்.

இதற்கு பிறகு பெற்றோர்கள் குழந்தைகளை பார்க்கவே முடியாது. குழந்தைகள் வளர்ந்தற்குப் பிறகு பெற்றோருக்கு அடையாளம் தெரியாது.

இவ்வாறு பிரிக்கப்பட்ட குழந்தைகளை விடுதியுடன் கூடிய பள்ளிகளில் தங்க வைத்து படிக்க வைத்தனர்.

அவர்களை சரியாக பராமரிப்பது கிடையாது. போதிய உணவு கொடுப்பது கிடையாது. நோய் வந்தாலும் கவனிப்பது கிடையாது. இஷ்டத்திற்கு கொடுமைப்படுத்தினார்கள்.

இதன் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்தனர். அவ்வாறு இறந்த குழந்தைகள் உடல்களை பள்ளி வளாகத்திலேயே புதைத்தார்கள். இப்படித்தான் கனடா பள்ளியிலும் பழங் குடிமக்களின் குழந்தைகளை புதைத்ததாக கருதப்படுகிறது.

இப்போது 215 குழந்தைகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இப்போதும் கனடாவில் பழங்குடி மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் கனடா முழுவதும் இந்த குழந்தைகளுக்காக விசே‌ஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இது சம்பந்தமாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மேரி எலன் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஐ.நா. சபை ஒரு அமைப்பை உருவாக்கி அதன்மூலம் விசாரணை நடக்க வேண்டும். இதில் சர்வதேச பங்களிப்பும் இருக்க வேண்டும்.

மேலும் கனடா அரசு சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விசாரணை சர்வதேசத் தரத்தில் அமைய வேண்டும். அதே நேரத்தில் விசாரணை என்ற பெயரில் பழங்குடி மக்களை துன்புறுத்தக் கூடாது’’ என்று கூறியுள்ளார்.

அந்த காலத்தில் இது போன்ற பள்ளிகள் பல இடங்களிலும் செயல்பட்டன. அந்த பள்ளிகளிலும் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம். எனவே அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறி இருக்கிறார்கள். அனைத்து பள்ளிகூடத்திலும் உள்ள ஆவணங்களில் இது சம்பந்தமான தகவல்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *