• Sun. Oct 12th, 2025

எரிபொருள் விலையை உடனடியாகக் குறையுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் வலியுறுத்தல்

Byadmin

Jun 15, 2021

நகைச்சுவை பேச்சுக்களைத் தவிர்த்து எரிபொருள் விலையைக் குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளரால் நகைச்சுவையான அறிக்கையொன்று வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களுக்குள், ஜனாதிபதி ஊடகப் பிரிவினூடாக மற்றுமொரு நகைச்சுவைக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒன்றுக்கொன்று சளைக்காத வகையில் வெளியிட்ட இந்த அறிக்கைகளின் மூலம் மக்களை நகைச்சுவைக்குள்ளாக்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளர்.

இவ்வாறான கடுமையான காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலையை அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறுவது ஆராய்ந்து பார்க்காது முன்வைக்கப்பட்ட வாதம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு உற்பத்திகளை வலுப்படுத்துவதாகக் கூறி இரசாயன உர வகைகளுக்கு தடை விதித்த அரசாங்கம், சேதனப் பசளையை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பகல் கொள்ளை என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் படும் துன்பங்களை கருத்திற்கொள்ளாது, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம், எரிபொருள் விலையை அதிகரித்து தங்களின் உண்மை பிம்பத்தை உறுதிப்படுத்திக் காட்டியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

எரிபொருளுக்கான நிதியத்தை ஆரம்பித்து, விலை குறைவடையும் போது மேலதிக நிதியை அதில் வைப்பிலிடுவதாகவும், விலை அதிகரிக்கும் போது அதிலிருந்து நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கான சலுகைகளை வழங்குவதாகவும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளதுடன், அந்த நிதியத்திற்கு தற்போது என்ன நடந்துள்ளது என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *