நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர் பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது.குறித்த தினத்தன்று இறந்த சிறுவன் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கினார்.இதில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சிறுவனின் சடலம் மீதான் பிரேத பரிசோதனை நேற்று (9) நடைபெற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக பாலர் பாடசாலையின் அதிகாரி, விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, சிறுவர்களுக்குப் பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.