• Sat. Oct 11th, 2025

உக்ரைன் அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

Byadmin

Jan 17, 2022

உக்ரைன் அரசு முடக்கப்பட்ட அரசு இணைய தளங்களை மீட்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு உதவுவதாக தெரிவித்துள்ளன.
உக்ரைன் நாட்டு அரசு இணையதளங்கள் திடீரென முடக்கப்பட்டன. வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளை சேர்ந்த இணையதளங்களில் ஹேக்கர்கள் ஊடுருவி முடக்கினர். அந்நாட்டு மக்களின் தனிநபர் விவரங்களை வெளியிடப்போவதாகவும், வரும் நாட்களில் மோசமான விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறும் ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உக்ரைன் அரசு முடக்கப்பட்ட அரசு இணைய தளங்களை மீட்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு உதவுவதாக தெரிவித்துள்ளன.
அரசு இணையதளங்கள் மீதான சைபர் தாக்குதல் பின்னணியில் ரஷியா இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது. ரஷியாவுக்கு உக்ரைனுக்கும் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
சமீபத்தில் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கடும் விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் உக்ரைன் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்நாட்டு வெளி யுறவுத்துறை செயலாளர் ஒலேக் நிகோலென்கோ கூறும்போது, ‘உக்ரைனின் பாதுகாப்பு ஏஜென்சியின் ஆரம்ப கட்ட விசாரணையில் ரஷிய ரகசிய ஏஜென்சியுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் உக்ரைன் அரசின் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’ என்றார்.
இந்த நிலையில் உக்ரைன் மீது படை எடுக்க ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷிய பாதுகாப்பு படையினர் மீது ரஷிய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என்று குற்றஞ்சாட்டி உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *